மிஹிந்தலை புண்ணிய பூமி புனர்நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

மிஹிந்தலை புண்ணிய பூமி புனர்நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை புண்ணிய பூமியில் அமைந்துள்ள மிஹிந்து மகா சேய, மிஹிந்து லென் சேனாசுன மற்றும் தாது கோபுர புனர்நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

மஹிந்த தேரர் பரிநிர்வாணமடைந்த தினத்தை நினைவுகூரும் 2280 வது மிஹிந்துபுர அடவக்க பூரணை நாள் நேற்று முன்தினமாகும் (23). அதனை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் நேற்று (24) பிற்பகல் சங்கைக்குரிய கிரிபத்கொட ஞானாநந்த தேரர் உள்ளிட்ட மகாமெவ்னா தியான நிலையத்தின் பங்களிப்புடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மிஹிந்தலை புண்ணிய பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். புத்தரின் புனித தந்தமும் மஹிந்த தேரரின் புனித தந்தமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பேழை கி.மு. 03 ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகும் என கருதப்படுகின்றது. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பொருத்தமான வகையில் புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள தாதுகோபுரத்தை புனர் நிர்மாணம் செய்வது இதில் ஒரு கட்டமாகும்.

மஹிந்த தேரரின் முதல் பாதம் பதிந்த இடமாக கருதப்படும் “சந்திரகாந்தி பாஷணய“ அமைந்துள்ள சேல சைத்தியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்த தேரரின் உருவச்சிலையை ஜனாதிபதி அவர்கள் திறந்துவைத்தார்.

கி.மு. 200-210 இடைப்பட்ட காலப்பகுதியில் ஆட்சி செய்த தேவனம்பியதிஸ்ஸ மன்னரின் இளைய சகோதரர் உத்திய மன்னரினால் மிஹிந்து மகா சேய நிர்மாணிக்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகவும் பழைமைவாய்ந்த சைத்தியவாக இந்த சைத்திய கருதப்படுகின்றது.

நீண்ட காலமாக சிதிலமடைந்து காணப்பட்ட மிஹிந்து மகா சேயவின் தொன்மை அம்சங்களை பாதுகாத்து புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்த அறநெறி மண்டபத்தின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்பணிகள் எதிர்வரும் பொசொன் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மஹிந்த தேரர் தியானத்தில் இருந்ததாக கருதப்படும் மிஹிந்து குகை, மிஹிந்து லென அமைந்துள்ள இடத்தை சென்றடைவதற்கான வீதியும் இதன் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றது. இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து இப்பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

மிஹிந்து மகா சேயவில் இடம்பெற்ற சமயக் கிரியைகளிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். இங்கு அனுசாசன உரை நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர், ஜப்பான் உள்ளிட்ட தென்கிழக்காசியாவின் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பெல்பொல விபஸ்ஸி தேரர் மற்றும் இலங்கை அமரபுர மகா நிகாயவின் ஸ்ரீ கல்யானவங்ச பிரிவின் அனுநாயக தேரர் சங்கைக்குரிய கிரிபத்கொட ஞானாநந்த தேரர் ஆகியோர் சுதந்திரமான சூழலைக்கொண்ட அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்தனர்.

சிரேஷ்ட தலைவரொருவர் நாட்டை பொறுப்பேற்றிருப்பதாக சுட்டிக்காட்டிய தேரர் அவர்கள், இனம், சமயம், கட்சி என்ற அனைத்து பேதங்களையும் மறந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மன்னர்கள் காலத்தின் பின்னர் அரச தலைவர் ஒருவரின் பங்குபற்றுதலுடன் மஹிந்த தேரரின் அடவக்க நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுவது முக்கியமான நிகழ்வாகும் என்றும் மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

தாய்வானின் தலைமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய போதாகம சந்திம தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக, ஷெஹான் சேமசிங்க, பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment