இலங்கையில் பழுதடைந்த பி.சி.ஆர். இயந்திரம் திங்கட்கிழமை மீண்டும் இயங்கும் - சீனத் தூதரகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

இலங்கையில் பழுதடைந்த பி.சி.ஆர். இயந்திரம் திங்கட்கிழமை மீண்டும் இயங்கும் - சீனத் தூதரகம்

இலங்கையில் பழுதடைந்துள்ள பி.சி.ஆர். இயந்திரம், நாளை (02) முதல் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில் நுட்பவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.

BGI Genomics எனும் சீன நிறுவனத்தினாலேயே குறித்த பி.சி.ஆர். இயந்திரம் நிறுவப்பட்டிருந்த நிலையில் அந்நிறுவன தொழில்நுட்ப குழுவினரே இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்ட குறித்த இயந்திரம், திடீரென பழுதடைந்தமை காரணமாக, பி.சி.ஆர். முடிவுகளை பெறுவதில் சிக்கல் மற்றும் தாமதம் ஏற்பட்டிருந்தது.

அதில் ஏற்பட்ட பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதனை நிறுவிய குறித்த நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளர்கள், அவசர வேண்டுகோளின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் (30) இலங்கை வந்தடைந்ததாக, சீனத் தூதரகம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, மேற்கொண்ட 10 மணி நேர முயற்சியை அடுத்து, அதிலுள்ள பிரச்சினைகளை குறித்த தொழில்நுட்பவியலாளர் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளது.
ஆய்வுகூட சூழல், குறிப்பாக பணி மேற்கொள்ளும் மேசையின் நிலையற்ற தன்மை உள்ளிட்ட, பி.சி.ஆர். இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான பல விடயங்களை சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பல சுற்று பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதா என 100% உறுதிப்படுத்தப்பட்டு, நாளை (02) முதல் அது சேவையில் இணைக்கப்படும் என, தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த இயந்திரத்தின் மூலம் இதுவரை 26,000 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சீனத் தூதரகம், குறித்த இயந்திரம் அவசர தேவையின் அடிப்படையில் சீனாவின் உதவியுடன் கடந்த ஜூன் மாதம் நிறுவப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இவ்வியந்திரத்தை நிறுவியுள்ள, BGI Genomics எனும் முன்னணி உயிரியல் தொழில்நுட்ப சீன நிறுவனம், 66 நாடுகளுக்கு தனது உற்பத்திகளை வழங்கி வருவதோடு, சீனா (வூஹான்), ஹொங்கொங், அவுஸ்திரேலியா, சேர்பியா உள்ளிட்ட நாடுகளில் பி.சி.ஆர். சோதனை கூடங்களை அமைத்துக் கொடுத்துள்ளதாக, சீனத் தூதரகம் அதன் ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment