(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
கஞ்சா பாவனையை ஊக்குவிக்கும் வகையில் பாராளுமன்ற ஊழியர்களுக்கு புத்தகமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது, ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தில் இன்று (நேற்று) கஞ்சா தொடர்பாக கதைக்கப்பட்டது. அவ்வாறாக கதைக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாராளுமன்ற ஊழியர்களுக்கு புத்தகமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்திற்கு விருந்தினர்களைக்கூட வர அனுமதிப்பதில்லை. இவ்வாறு இருக்கையில், இந்த புத்தகம் யாரால் பாராளுமன்றத்திற்குள் விநியோகிக்கப்பட்டது.
''த்ரைலோக்க விஜய'' என்ற பெயரில் அந்த புத்தகம் உள்ளது. புத்தகத்தை வெளியிட்டமைக்கு பிரச்சினையில்லை. ஆனால், அதில் உள்ளே ''இன்பம் பெறுவீர்'' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் கஞ்சாவை பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்குமாறா தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என கேட்கின்றேன்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர், இந்த வியடம் தொடர்பாக தேடிப்பார்த்து அறிவிக்கின்றேன் என்றார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் பந்துலகுணவர்தன எழுந்து, அவர் இந்த புத்தகத்தை நாங்களே விநியோகித்ததாக கூறுவதற்கே முயற்சிக்கின்றார். இந்த புத்தகம் என்னால் இந்த பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பதனை கூறிக்கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment