சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே! - News View

Breaking

Post Top Ad

Sunday, October 25, 2020

சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே!

• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் 
• இரட்டை வேடம் போடவில்லை 
• ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை 
• மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் 
• தமிழ் பேசும் தரப்பு உறவுகள் குறித்து கரிசனை 

ஜனநாயகத்தினை தாரைவார்க்கும் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை எமது கட்சியின் நான்கு உறுப்பினர்கள் ஆதரித்ததன் மூலம் முஸ்லிம்களின் அடையாளமாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான நான் சூழ்நிலைக் கைதியாகி விட்டேன் என்று அக்கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசியலில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் மாறுபட்ட நிலைப்பாட்டினால் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தான் ஒருபோதும் இரட்டை வேடம் போடவில்லை என்பதை இதயசுத்தியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

முஸ்லிம் காங்கிரஸின் அடுத்தகட்ட செயற்பாடுகள் மற்றும் 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் தொடர்பில் அடுத்த வாரம் கூடும் உயர்பீடத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்புடன் ஒருபோதும் இணையப் போவதில்லை என்றும் அவர் திடமாகக் கூறினார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்கள் இருவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டமை, அதுபற்றி எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள், முஸ்லிம் காங்கிரஸ் மீது எழுந்துள்ள விமர்சனங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நேற்றையதினம் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்தவிடயங்கள் வருமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடையாளமாக செயற்பட்டு வருகின்ற அரசியல் கட்சியாகும். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலத்தில் தேசிய ரீதியில் தனது சமுகம் சார்ந்து உரிய தருணங்கள் சரியான தீர்மானங்களை எடுத்தே வந்திருக்கின்றது. 

அவ்வாறான நிலையில் கடந்த காலத்தில் 18 ஆவது திருத்தினை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது. இந்த பாவத்தினை கழுவுவதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்திருந்தது. அதுமட்டுமன்றி தற்போதைய ஆட்சியாளர்கள் நீண்டகால நோக்கில் ஜனநாயகத்தினை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தினை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்திருந்தது. 

பாராளுமன்றத்தின் ஊடாக 20 ஆவது திருத்தினை நிறைவேற்றும் செயற்பாட்டை தடுக்க முடியாது என்பதற்காகவே அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் நாடியிருந்தது. 

இறுதி தீர்மானம் எடுக்கவில்லை 
இவ்வாறான நிலையில் எமது கட்சியின் உயர்பீடத்தில் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தான. அச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் கிழக்கு மாகாண மக்களின் நிலைமைகள், அங்குள்ள சூழல்கள் தொடர்பில் அதிகளவான கரிசனைகளை வெளியிட்டார்கள். இதனால் ஒரு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. 

எனினும், நீண்டகால அடிப்படையில் ஜனநாயகத்தினை ஒழிக்கும் விடயத்திற்கு ஆதரவளித்து நாட்டை தாரைவார்க்க முடியாது என்ற நிலைப்பாட்டினை தலைவர் என்ற வகையில் உறுதியாக கூறியிருந்தேன். 

அனுமதி அளிக்கவில்லை 
இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே எமது உறுப்பினர்கள் என்னிடத்தில் அனுமதி பெற்று ஆதரவை வெளியிட்டதாக கூறியிருக்கின்றார்கள். அது முற்றிலும் தவறான விடயமாகும். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அத்தகைய ஒரு அனுமதியை வழங்கவில்லை. 

மேலும் உயர்பீடத்தில் தீர்மானம் இறுதியாகாத நிலையில் கட்சியின் தலைமையின் தீர்மானம் தொடர்பில் அவர்கள் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அந்த விடயத்தில் அவர்கள் அக்கறை காட்டவே இல்லை. 

உறுப்பினர்களுடனான சந்திப்பு 
இந்நிலையில் நான் அவர்களுடன் சந்திப்பினை நேற்று (நேற்றுமுன்தினம்) நடத்தியிருந்தேன். அதன்போது அவர்கள் கட்சியையும், தலைமையையும் விட்டுப் பிரிந்து செல்லும் நோக்கமில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார்கள். 

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் ஏனைய பிரதேசங்களை விடவும் மாறுபட்டதாக உள்ளதால் தான் அவ்விதமான முடிவினை எடுக்க வேண்டி ஏற்பட்டதாக திரும்பத்திரும்ப என்னிடத்தில் கூறினார்கள். 

அனைத்தும் நடந்து முடிந்து விட்ட நிலையில் என்னிடத்தில் விளக்கங்களை அளிப்பதால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களும் தர்மசங்கடமான நிலைமைகளும் மாறப்போவதில்லை என்பதை அவர்களிடத்தில் கூறினேன். 

உயர்பீடத்தில் முடிவு 
ஆகவே அடுத்த கட்டமாக எதிரணியுடன் நாம் எவ்வாறு தொடர்ந்தும் ஐக்கியமாக செயற்படுவது, நம்பிக்கையை கட்டியெழுப்புவது, தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட விடயங்கள் தொடர்பில் உயர்பீடத்தில் இறுதி முடிவு எடுப்போம் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

மேலும் உயர்பீடத்தினை அடுத்த வாரம் கூட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அவர்களின் அபிப்பிராயங்களுக்கு அமைவாக அடுத்த கட்டத்துக்கான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 

கொரோனா தீவிரமடையும் சூழிலில் எமது உயர்பீட உறுப்பினர்களினை தலைமையகத்தில் ஒருங்கிணைப்பதில் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமையொன்றும் காணப்படுகின்றது. எனினும் தவிர்க்க முடியாத இந்த சூழலில் அவர்களை ஒருங்கிணைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றேன். 

தர்மசங்கடமான நிலை 
இதனை விடவும், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தபோது அங்கும் கடுமையான விமர்சனங்கள் எமது இயக்கத்தின் மீது முன்வைக்கப்பட்டது. குறிப்பாக இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கருத்துக்களையும் முன்வைத்தார்கள். 

அதேநேரம், 18 ஐ ஆதரித்து, 19 யும் ஆதரித்து தற்போது 20 யும் நான் தவிர்ந்த ஏனையவர்கள் ஆதரித்துள்ளமையானது எமது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எனக்கு தர்மசங்கமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண சூழல்கள் என்பதற்கு அப்பால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் எதிர்காலம் அதில் முஸ்லிம்களின் நிலைமை உள்ளிட்ட விடயத்திலேயே தீவிர கவனம் அவசியமாக இருக்கின்றது. 

அதேநேரம், 20 ஐ நான் தவிர்ந்தவர்கள் ஆதரித்தமையால் எதிர்க்கட்சியையும் ஆளும் தரப்பினையும் கையாள்வதற்காக நாம் இரட்டை வேடம் போடுகின்றோம் என்ற தோற்றத்தினையும் தலைதூக்கச் செய்திருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இரட்டை வேடம் போடவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். 

ஏனைய தரப்புடனான உறவு 
இதேநேரம், எதிரணியில் உள்ள தமிழ் பேசும் தரப்புகளுடனான இணைந்த செயற்பாடுகள், முற்போக்கு சக்திகளுடனான இணைந்த பயணங்கள் என்பன பற்றியும் நாம் தீவிரமான முடிவுகளில் உள்ளோம். 

தற்போது அத்தரப்புக்களுடனான உறவுகள் தொடர்பாகவும் மீண்டும் கரிசனை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களையும் ஒட்டு மொத்தமாக புறந்தள்ளி விட முடியாது. 

குறிப்பாக தமிழ்த் தரப்புக்களுடனான உறவில் நாம் கூடியளவு கரிசனை கொண்டிருக்கின்றோம். தற்போதைய ஆட்சியாளர்களின் இதுகாலவரையான பிரதிபலிப்புக்கள் அந்தக்கரிசனையை வலுவாக அர்த்தப்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. 

என் நிலை 
இத்தகைய பின்னணிகளின் அடிப்படையிலான தற்போதைய சூழலில் கட்சித் தலைமையான நான் சூழ்நிலைக் கைதியாகி விட்டேன். இந்த சூழலில் இருந்து மீள வேண்டும். எமது கட்சியின் சேதாரங்களை தடுக்கும் அதேநேரம் ஏனைய தரப்புக்களுடனும் நாம் மீண்டும் உறவுகளை கட்டியழுப்பி அரசியல் பயணத்தினை தொடர வேண்டியுள்ளது. 

அதற்காக கட்டாயமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எமது சமுகத்திற்காக தெளிவு படுத்தல்களையும் அடுத்து வரும் காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad