நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் : பேராசிரியர் குணதாச அமரசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் : பேராசிரியர் குணதாச அமரசேகர

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் பொதுமக்களும் மதத் தலைவர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படும் பட்சத்தில் நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கடந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தியது. பொதுக் கொள்கைகளை விடுத்து குறுகிய அரசியல் பழிவாங்கலை நோக்காகக் கொண்டு 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அரச அதிகாரம் யாருக்கு அதிகமாக காணப்படுகிறது என்ற போட்டித்தன்மை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டதால் அரச நிர்வாகம் பலவீனமடைந்து. ஒரு கட்டத்தில் அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்துக்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பிரதான காரணியாக இருந்தது. இதனை பின்னணியாக கொண்டு மக்கள் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

20 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளோம். பொதுமக்கள் சார்பில் சிவில் அமைப்புக்களும், மதத் தலைவர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். 

மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment