மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்தான் காணிகள் ஒதுக்கிக் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது - கருணாகரம் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்தான் காணிகள் ஒதுக்கிக் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது - கருணாகரம் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி (B) வலயத்தில் வெளியாறுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை திட்மிட்டு குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுளே இடம்பெற்று வருகின்றன. மகாவலி பி வலயத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களே இவ்வாறு அபகரிக்கப்படுகின்றன. 

இதன் பின்புலத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கடந்த 14ஆம் திகதி இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிபர் என்ன காரணத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு மேலாக கடந்த 12ஆம் திகதி காணி அபகரிப்பு இடம்பெற்றுவரும் மயிலத்தமடு, மாதனை பிரதேசங்களுக்கு அவர் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 

13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரை சந்தித்திருந்தோம். 14ஆம் திகதி கிழக்கு ஆளுனரையும் சந்தித்திருந்தோம். இரண்டு இலட்சம் மாடுகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சேனை பயிர்ச் செய்கைக்காக 5 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதால் குறித்த நிலப்பகுதியில் மாடுகளை மேய்க்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 

2010ஆம் ஆண்டு 27,311 ஹெக்டேயர் நிலம் மாடுகள் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 5 இலட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34 இலட்சத்திற்கும் அதிகமான லீட்டர் பால் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைகள் உள்ள போதிலும் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

இலங்கை முழுவதும் மகாவலி வலயம் எனக் கூறப்படும் 10 வலயங்களில் 1,23,630 சிங்களக் குடும்பங்களுக்கு 96 சதவீதமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளன. 12 சதவீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு அதாவது இந்த வலயத்தில் உள்ள 1834 குடும்பங்களுக்கு 1.42 சதவீதமான நிலம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. 3000 முஸ்லிம் குடும்பங்களுக்கு 2.39 சதவீதமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி வலயத்தில் காணிகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்மென்றால் அவை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்தான் ஒதுக்கிக் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. 

13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுதான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனையவர்களுக்கு காணிகள் ஒதுக்கிக் கொடுக்கப்படுவதானது திட்டமிட்ட இனவாத குடியேற்றமாகும் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்றார்.

No comments:

Post a Comment