வவுனியாவில் 4 கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கி மீட்பு : ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

வவுனியாவில் 4 கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கி மீட்பு : ஒருவர் கைது

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான கஞ்சா செடி நான்கு மீட்கப்பட்டதுடன், துப்பாக்கி ஒன்றும் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று (18) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் பொலிஸ் குழுவினர் வவுனியா, முருகனூர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 6 அடி உயரமான நான்கு கஞ்சா செடிகள் கண்டு பிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டது.

அத்துடன், குறித்த வீட்டின் பின்பகுதியில் ரவைகள் இடப்பட்டு சுடுவதற்கு தயாரான நிலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தயாரிப்பான துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய ரவைகளும் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரான 40 வயது குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad