கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2 வயது குழந்தை மற்றும் பெற்றோருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2 வயது குழந்தை மற்றும் பெற்றோருக்கு கொரோனா

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

குறித்த குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையிலேயே அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

குழந்தையின் தந்தைக்கே முதலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கலந்துகொண்ட திருமண நிகழ்விற்கு சென்றதன் காரணமாகவே தந்தை பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலை ஊழியர்கள் யாருக்கும் இதனூடாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அத்தியாவசியமற்ற விதத்தில் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment