திட்டமிட்டவாறு பாராளுமன்றம் இன்று கூடும், 20ஆம் திருத்தம் நாளை - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

திட்டமிட்டவாறு பாராளுமன்றம் இன்று கூடும், 20ஆம் திருத்தம் நாளை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகளை பிற்போடுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எழுத்து மூலம் சபாநாயகரை கோரியுள்ள போதும் திட்டமிட்டவாறு இன்று பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

இவ்வாரம் திட்டமிட்டவாறு பாராளுமன்ற அமர்வுகளை தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்பட்டதாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், 20 ஆவது திருத்தம் மீதான விவாதமும் நடத்தப்பட இருப்பதாக கூறினார்.

இதேவேளை இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்தி வைக்குமாறு கோரி எதிர்கட்சியின் பிரதம கொரொடா பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நேற்று சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் பாராளுமன்ற கூட்டங்களை நடத்த முடியாது எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணானது எனவும் எம்.பிகளுக்கான ஆசன ஒதுக்கீடும் இதற்கு மாற்றமாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் திட்டமிட்டவாறு இன்று (20) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. இன்று ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது.

நாளையும் நாளை மறுதினமும் 20 ஆவது திருத்தம் மீதான விவாதம் நடைபெற இருப்பதோடு வௌ்ளியன்று மூன்று முன்னாள் எம்.பிகள் அனுதாபப் பிரேரணை விவாதம் இடம்பெறுகிறது.

​இதேவேளை இன்று பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் 20 ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற வியாக்கியானம் தொடர்பான சபாநாயகர் அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment