ஹெரோயின் கடத்தல் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு, தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள கான்ஸ்டபிளின் வழக்கை இந்திய மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பகுதியில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தேடப்பட்ட கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் கான்ஸ்டபிள் தனுஷ்கோடியில் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பிரவீன் குமார பண்டார எனும் குறித்த நபரை கடந்த 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 13 நாட்களுக்கு சென்னை புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தனுஷ்கோடி - கம்பிபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட அந்நபர், கரையோர பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்தார். விசாரணையின் போது அவர் தான் ஒரு கூலித் தொழிலாளி என்றும் கடன் தொல்லை காரணமாக இந்தியாவிற்கு வந்ததாகவும் தெரிவித்ததாக இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், அவர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்ட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் கான்ஸ்டபிள் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த நிலையிலேயே அவர் தொடர்பான விசாரணைகளை இந்திய மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment