உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே! பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்! - News View

Breaking

Post Top Ad

Friday, September 25, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே! பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்!

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கையின் பெறுபேறு என தெரிவித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே சாரும் என குறிப்பிட்டார். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று (24) இதனைத் தெரிவித்தார். 

தான் இதுவரை எவரிடமும் கூறாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த விடயங்களை, முதன் முறையாக வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டி, உணர்வு பூர்வமாக அவர் சாட்சியமளித்தார். இதன்போதே அவர் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார். 

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது. 

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. 

இதன்போதே நேற்று (24) மூன்றாவது நாளாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலிலும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சாட்சியமளித்தார். 

சாட்சி விசாரணைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது, முதலில் வவுணதீவு பொலிஸாரின் படுகொலை, மாவனெல்லை, வெலம்பொடை, கண்டி, கம்பொளை, பொதுஹர பகுதிகளில் புத்தர் சிலை தகர்க்கப்பட்ட விவகாரம், வடக்கின் அடம்பன் பொலிஸ் பிரிவில் இந்து, கிறிஸ்தவ கடவுள்களின் உருவப்படங்களும் சிலையும் சேதமாக்கப்பட்ட விவகாரம், பேராதனையில் கிறிஸ்தவ வழிபாட்டு உருவச் சிலை சேதமாக்கப்பட்ட விடயம் குறித்த விசாரணைகள் தொடர்பில் அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவினால் வினவப்பட்டது. 

இந்த சம்பவங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கும் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் பதிவாகியிருந்த நிலையில், பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக இவை தொடர்பில் விசாரிக்க சி.ஐ.டி.க்கு தான் உத்தரவிட்டதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதன்போது குறிப்பிட்டார். 

இந்த விசாரணைகளின் போது, அவற்றின் பின்னனியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உள்ளமையும், அவர்கள் ஜமா அத்தே இஸ்லாம் எனும் அமைப்பிலிருந்து, குறித்த அடிப்படைவாத சிந்தனை காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்ததாகவும் அவர் தனது பதிலில் சுட்டிக்காட்டினார். 

இதனையடுத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் விசாரிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஏற்கனவே வாய் மொழி மூலம் விடுத்த உத்தரவை, குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டதன் ஊடாக நீர் மீறியுள்ளீர்களா என இதன்போது பூஜித ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த பூஜித, நேரடியாக பதில் கூறுவதென்றால் ஆம். உண்மையில் ஜனாதிபதி எனக்கு அவ்வாரு கட்டளை இட்டுள்ளதை எனது சிரேஷ்ட அதிகாரிகளிடம் என்னால் கூற முடியாது. அப்படி நான் வெளிப்படையாக கூறினால் நிலைமை என்னவாகும். உண்மையில் எனக்கு பொலிஸ் மா அதிபர் பதவியின் கடமைகளை முன்னெடுக்க ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பல்வேறு தடங்கள்களை ஏற்படுத்தினார். 

(மனம் உருகி அழுதவாறு) நான் மிக மோசமான முறையில் மனதளவில் அழுத்தங்களை சந்தித்தேன். எனக்கு அவற்றைக் கூற ஒரு இடம் இருக்கவில்லை. என்னைப் பற்றி தவறாக ஊடகங்கள் ஊடாக பிரச்சாரம் செய்த போது கூட நான் பொறுமையாக அமைதியாக இருந்தேன். எனது ஊடகப் பேச்சாளர் ஊடாக கூட நான் விளக்கமளிக்க முற்படவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கும் போதே முதன் முறையாக சில விடயங்களை மட்டும் வெளிப்படுத்தினேன். 

இங்கு நான் கூறும் பல விடயங்கள் இதுவரை என் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்தவை. யாரிடமும் கூறவில்லை. இவ்வாணைக்குழு எவ்வளவு முயற்சித்தாலும் வெளியே எடுக்க முடியாத சில விடயங்களும் உள்ளன. 

ஏற்கனவே தேசிய உளவுத் துறை சார்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் போது, எந்த அடிப்படை வசதிகளும் இன்றி மிக்க சிரமத்துக்கு மத்தியில் அவர்கள் கடமையாற்றியதாக கூறப்பட்டது. அது பொய். அவர்களுக்குத்தான் கூடிய சம்பளம் வழங்கப்பட்டது. கூடிய கொடுப்பணவுகளும் வழங்கப்பட்டது. எந்த கேள்வி கணக்கும், கணக்காய்வுக்கும் உட்படாத பெரும் தொகை இரகசிய பணம் செலவுக்கு வழங்கப்பட்டிருந்தன. அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து அவர்களிடம் உளவுச் சேவை எனும் ஒரே ஒரு சேவை மட்டுமே எதிர்ப்பார்க்கப்பட்டது. என தெரிவித்தார். 

இதன்போது கடந்த 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கப் பெற்றிருந்த தாக்குதல்கள் குறித்த அறிவிப்பு அடங்கிய அறிக்கை தொடர்பிலும் அதனை பகிர்ந்த விதம் குறித்தும், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பாமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 

அவற்றுக்கு பதிலளித்த பூஜித ஜயசுந்தர, 'எனக்கு கிடைக்கப் பெற்ற தகவல் உளவுத் தகவல் அல்ல. அது மிக இரகசியமான ஒரு தகவல் மட்டுமே. அதனை நான் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, அதிரடிப்படை கட்டளை தளபதி லத்தீப், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க மற்றும் பயங்கரவாத புலனய்வுப் பிரிவு பணிப்பாளர் வருண ஜயசுந்தர அகியோருக்கு பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுப்பி வைத்தேன். 

மேல் மாகாணம் பிரதானமானது என்பதாலும், அதற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் கீழ் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பிரிவு கட்டுக்குள் இருந்ததாலும் அவருடன் அவ்வறிக்கையை பகிர்ந்து கொண்டேன். 

அதிரடிப்படையின் பிரிவுகள் எல்லா பொலிஸ் வலயங்களிலும் நிலைகொள்ளச் செய்யப்பட்டிருந்த நிலையிலும், 'கூகா' எனும் அதி பாதுகாப்பு தகவல் பரிமாற்ற மென் பொருள் ஊடாக அவர்கள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட வசதி இருந்தமையாலும் அவருடன் அதனை பரிமாரினேன்.

பிரியலால் தசநாயக்கவின் கீழ் பிரபுக்கள் பாதுகாப்பு விடயம் இருந்தமையாலேயே அவரையும் தேர்ந்தெடுத்தேன். வருண ஜயசுந்தரவின் கீழ், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அவதானம் செலுத்தியமையால் அவருக்கும் அந்த தகவலை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்தேன். 

என பதிலளிக்கும் போது, ஜனாதிபதிக்கு அது தொடர்பில் அறிவிக்காமை ஏன் ? என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த பூஜித, 'ஜனாதிபதிக்கு தேசிய உளவுச் சேவை பிரதானியே தகவல்களை வழங்குவது சம்பிரதாயம். இதுதான் நடைமுறை. தேசிய உலவுச் சேவை பிரதானிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருந்தமை எனக்கு தெரியும். எனவே அவர் அந்த தகவலை கொடுத்திருப்பார். அத்துடன் ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையே, அப்போது பாரிய விரிசல் இருந்த நிலையிலும் அடிப்படைவாதம் தொடர்பில் எனக்கு விசாரிக்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ள பின் புலத்திலும் நான் அவருக்கு அது தொடர்பில் தெரிவிக்கச் செல்லவில்லை. என்றார். 

இதன்போது, அப்படியானால் உங்களுடன் பாதுகாப்பு இரஜாங்க அமைச்சர் நல்ல நிலையில் தானே இருந்தார். அவருக்கு அறிவித்தீரா? என ஆணைக்குழு வினவியது. அதற்கு பதிலளித்த பூஜித், அவருடன் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. அவருடன் அந்த தகவலை பகிர்ந்து என்ன பயன்? அவருக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. எனவே அவருக்கு கூறுவதன் ஊடாக ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனவே நான் அதனை அவருக்கு கூறவில்லை. அது இரகசிய தகவல் என்பதாலேயே நான் தேர்ந்தெடுத்த நான்கு அதிகாரிகளுக்கு மட்டும் அனுப்பினேன். எனினும் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுடனும் தொலைபேசியில் அது தொடர்பில் கலந்துரையாடி ஆலோசனை வழங்கினேன். என்றார். 

இதன்போது, ஏனைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு தொலைபேசியில் கதைத்தீரா? என ஆணைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த பூஜித் ஜயசுந்தர, 'ஆம்... நான் கதைத்தேன். எனினும் எனது தொலைபேசி விபரப்பட்டியலை பின்னர் பார்க்கும் போது, நான் கதைத்த இலக்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இது எப்படி நடந்தது. எனக்கே ஆச்சரியமாக உள்ளது. தொழில்நுட்பம் ஊடாகவும் சதி இடம் பெற்றுள்ளது. அப்போது டெலிகொம் மற்றும் மொபிடல் நிறுவனத்தின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபாலவின் சகோதரரே கடமையாற்றினார். எனவே இது தொடர்பில் எனக்கு நியாயமான சந்தேகம் உள்ளது. 

அது மட்டுமல்ல, நான் பொலிஸ் மா அதிபராக இருந்த போது, தேசிய உளவுச் சேவை அதிகாரிகள் என்னையே கண்காணித்தனர். எனது வீட்டுக்கு முன்பாகவே உளவாளிகள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். என்னால் ஒரு தொலைபேசி அழைப்பை பேச முடியவில்லை. அனைத்தையும் தேசிய உளவுச் சேவை பதிவு செய்தது. என உருக்கமாக சாட்சியமளித்த பூஜித, இந்த தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கையின் பிரதிபலன் என குறிப்பிட்டார். 

இதன்போது, நீங்கள் யாரை நோக்கி விரல் நீட்டுகின்றீர்கள் என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை நோக்கித்தான். அவரே இதற்கு பொறுப்பு. அவருடன் இருந்த ஆலோசகர்களும் அதன் பங்குதாரர்கள் என தெரிவித்தார். எனினும் அவர்களின் பெயரை வெளிப்படுத்த பூஜித ஜயசுந்தர விரும்பவில்லை. 

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை பொறுப்பேற்று பதவி விலகினால், தூதுவர் பதவி ஒன்றினை பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகங்களில் காணக்கிடைத்தது. அது உண்மையா? என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த பூஜித, 'ஆம்.. அது உண்மைதான். 2019 ஏப்ரல் 23 ஆம் திகதி. மாலை 6.00 மணிக்கு எனக்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு வந்தது. அன்று இரவு 8.00 மணிக்கு பெஜட் வீதி வீட்டுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது. நான் குறித்த நேரத்தில் அங்கு சென்றேன். அங்கு செல்லும் போதும், லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மஹிந்த அமரவீர (அவரின் பெயர் மட்டும் கொஞ்சம் சந்தேகமாக உள்ளது என தெரிவித்தவாறே) ஆகியோர் இருந்தனர். நான் 15 நிமிடங்கள் காத்திருந்த பின்னர், ஜனாதிபதியால் அழைக்கப்பட்டேன். உள்ளே சென்று கதைத்தேன். நானும் ஜனாதிபதியும் மட்டுமே இருந்தோம். 

அப்போது ஜனாதிபதி மைதிரி, 'பூஜித இந்த தாக்குதலுக்கு நீங்கள்தான் பொறுப்பு. நீங்களோ ஹேமசிறியோ எனக்கு எதனையும் கூறவில்லை. அதனால் என்னால் பொறுப்பேற்க முடியாது. எனவே நீங்கள் இதற்கு பொறுப்பேற்று இராஜினாமா செய்யுங்கள். நான் மல்கொடவுடனும் கதைத்தேன். அவரின் கீழ் நாளை ஆணைக்குழு அமைக்கவுள்ளேன். அதில் கண்டிப்பாக நீர் குற்றவாளியாவீர். எனவே நீங்கள் பதவி விலகினால் உள்நாட்டில் ஒரு உயர் பதவியையோ அல்லது தூதுவர் பதவியொன்றினையோ உங்களுக்கு பெற்றுத் தருகின்றேன். விசாரணைகள் குறித்து பயப்பட வேண்டாம். அதனை நான் பார்த்துக் கொள்கின்றேன்' என மூன்று முறை கூறினார். 

அதன் பின்னர் அமைதியாக இருந்த நான் பேசினேன். சேர்... என்னால் அப்படி பொறுப்பேற்க முடியாது. அப்படி செய்தால் நான் முழு பொலிஸ் திணைக்களத்தையும் காட்டிக் கொடுப்பதாக அமையும். நான் தவறிழைக்கவில்லை. இதுவரை பொலிஸ் சேவையில் நான் தவறாக ஒரு ரூபாவை கூட சம்பாதிக்கவில்லை. எனது கைகள் சுத்தமானது. கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால் இருக்க வீடு கூட எனக்கு இல்லை. எனது மனைவி பிள்ளைகளுக்கு என்ன பதில் கூறுவேன் எனது கவலைகளையும் சேர்த்தே பதிலளித்தேன். அப்போது நான் கூறுவதை கூறிவிட்டேன். இனி உங்கள் முடிவு. என மைத்திரி தெரிவித்தார். அதன் பின்னர் அங்கிருந்து சரியாக இரவு 8.46 மணிக்கு வெளியேறினேன். 

மீள ஏப்ரல் 26 ஆம் திகதி அழைப்பொன்று வந்தது. பூஜித அந்த கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என அவ்வழைப்பில் ஜனாதிபதி கூறினார். அதன் பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன என்னை சந்திக்க வந்தார். அவர் எனது வகுப்பு நண்பர். 'நான் சொல்வதைக் கேள். அவரைப் போய் சந்தித்து, சுமுகமாக முடித்துக்கொள்' என உதய ஆர். செனவிரத்ன எனக்கு கூறினார். 

எனினும் இது எனது தவரினால் ஏற்பட்ட நிலைமை அல்ல. முழு கட்டமைப்பினதும் தோல்வியே இது. என அவருக்கு நான் விளக்கமளித்தேன். என் மீது மட்டும் முழு பொறுப்பையும் திணிக்க முற்படுவது ஏன். அப்படியானால் பாதுகாப்பு சபையில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள். பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரிக்கு இரு தடவை சேவை நீடிப்பு வேறு வழங்கப்பட்டு அப்பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார். அவர் என்ன செய்தார். இராணுவ புலனாய்வுப் பிரிவின் 7000 இற்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் என்ன செய்தனர். கண்டிப்பாக இவற்றை கூறுவதால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படின் எனது மனைவி, பிள்ளைகள் மட்டும் அநாதைகளாவர் (கண்கலங்கிய வண்ணம்) என தெரிவித்தார். 

இதனையடுத்து, மேலதிகமாக விஷேட தகவல் ஒன்றினையும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித வெளிப்படுத்தினார். 

'இந்த விடயத்தையும் நான் கூற வேண்டும். இது எனக்கு கிடைத்த தகவல். தாஜ்சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்ய முயன்று அது தோல்வியடையவே, ஜெமீல் மொஹம்மட் எனும் குண்டுதாரி தெஹிவளை, ட்ரொப்கல் இன் எனும் தங்குமிடத்துக்கு இரு முச்சக்கர வண்டிகளின் துணையில் சென்றுள்ளார். அவர் அங்கு சென்று, குண்டு அடங்கிய பொதியை அறையில் வைத்துவிட்டு வெளியே சென்று, அங்கு குண்டு வெடிக்க 45 நிமிடங்களுக்கு முன்னர் ஒருவரை சந்தித்துள்ளார்.' என தெரிவித்தார். 

இதன்போது யாரை அவர் சந்தித்தார் என ஆணைக்குழு உறுப்பினர்கள் வினவினர். 

அதற்கு பதிலளித்த பூஜித ஜயசுந்தர, ஒரு உளவுச் சேவை உத்தியோகத்தரை சந்தித்ததாகவே எனக்கு தகவல் கிடைத்தது. உரிய நபர்களை அழைத்து சரியாக விசாரித்தால் உண்மையினை வெளிப்படுத்தலாம் என கூறினார். 

இந்நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சாட்சியம் நேற்று மாலை 4.00 மணியாகும் போது நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் சாட்சிப் பதிவு இடம்பெற்றது. மீள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவிடம் எதிர்வரும் திங்களன்று சாட்சிப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad