நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்வு - குளிர்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 7, 2020

நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்வு - குளிர்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கப்பலில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது |  Virakesari.lk
அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள நியூ டயமன்ட் எரிபொருள் கப்பலின் தீ பரவல் தொடர்பில் வெளிவரும் தகவல்களுக்கிணங்க சட்டமா அதிபர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேற்படி அனர்த்தத்துடன் தொடர்புடைய சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்துள்ளதுடன் உரிய ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையில் சட்டமா அதிபருடன் கடற்படைத் தளபதி, துறைமுக அதிகார சபையின் தலைவர், வர்த்தகக் கப்பலின் பணிப்பாளர், இராணுவத்தின் சுற்றாடல் பிரிவு அதிகாரிகளும் கலந்துகொண்டதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். 

அதேவேளை, அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள நியூ டயமன்ட் எரிபொருள் கப்பலில் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தீ பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினரின் அனர்த்த கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்துள்ள நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

கடற்படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கிணங்க கடற்படையினரின் மூன்று கப்பல்கள் வேகமாக செயற்படும் மூன்று விசேட கப்பல்கள், கடல் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மற்றும் இந்திய கப்பல்கள் ஆறு என பெருமளவு கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன் கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மாலுமி தவிர்ந்த ஏனைய 20 நபர்களும் கடற்படையினரால் கடற்படை கப்பலொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமது குடும்பத்தினரோடு தொலைபேசி மூலம் உரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நியூ டயமன் எரிபொருள் கப்பலில் தீ பிடித்தமை தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு பேர் கொண்ட விசேட வெளிநாட்டு குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது.

மேற்படி கப்பல் தரையிலிருந்து 40 கடல் மைல் தூரத்தில் 74 மீற்றர் ஆழமுள்ள கடற் பிரதேசத்தில் தற்போது உள்ளதாகவும் இரசாயனம் மற்றும் தண்ணீர் உபயோகப்படுத்தப்பட்டு தீயணைக்கும் செயற்பாடுகளும் அப்பிரதேசத்தை குளிர்மைப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கிணங்க, கடற்படையினரின் மூன்று கப்பல்கள், வேகமாக செயற்படும் மூன்று விசேட கப்பல்கள், கடல் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மற்றும் இந்திய கப்பல்கள் ஆறு என பெருமளவு கப்பல்கள் மற்றும் விமானங்களும் மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment