கடும் எச்சரிக்கையுடன் இரண்டு இலட்ச ரூபா பிணையில் விடுதலையானார் சிவாஜி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

கடும் எச்சரிக்கையுடன் இரண்டு இலட்ச ரூபா பிணையில் விடுதலையானார் சிவாஜி

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவு கூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று கடுமையாக எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று (15) வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தையும் அவருக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதியையும் கைது செய்தனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான லெப்டினன்ட் கேணல் திலீபனை, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினை வுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இருவருக்கும் எதிராக மன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணிகளான என். சிறீகாந்தா, வி. திருக்குமரன் உள்ளிட்ட 8 சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே மன்று சிவாஜிலிங்கத்தை எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீர பிணையில் செல்ல அனுமதித்து, வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

குறித்த வழக்கு விசாரணையின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி அஞ்சலி செலுத்தியமை, அஞ்சலி நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட பதாகையில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை மூலம் நாட்டை பிரிக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு பிணை வழங்கக் கூடாது என பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளால் லெப். கேணல் பதவி வழங்கப்பட்ட திலீபனுக்கு முதலாவது சந்தேகநபர் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதற்கு இரண்டாவது சந்தேக நபர் உடந்தையாக இருந்துள்ளார்.

திலீபனுக்கு நினைவேந்தல் செய்வதற்கு இந்த நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு முதலாவது சந்தேக நபரின் மனைவியிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டது. அந்த தடை உத்தரவை மீறி அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளார்.

அத்துடன் நினைவேந்தல் நிகழ்வில் சந்தேக நபர்களால் பயன்படுத்தபட்ட பதாகையில் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது இலங்கையிலிருந்து பிரிக்க முற்படும் நாட்டைக் குறிக்கும்.

எனவே நீதிமன்றத் தடையை மீறி மேலும் பலர் அஞ்சலி நிகழ்வை நடத்த உள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்காது 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவை மன்று வழங்க வேண்டும் என பொலிஸார் மன்றுரைத்தனர்.

நீதிமன்ற தடை உத்தரவு பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எனினும் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பிரதிவாதியின் மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சந்தேக நபர் தெரியும் வகையிலாவது நீதிமன்றத் தடையை பொலிஸார் ஒட்டியிருக்க வேண்டும்.

அதனால் சந்தேக நபர் நீதிமன்றத் தடை உத்தரவை மீறவில்லை. ஏனைய விடயங்களுக்குச் செல்ல நாம் விரும்பவில்லை. மேலும் ஈழம் என்ற சொல்லு தமிழர் பகுதிகளைக் குறிக்கிறது. அதில் தவறில்லை. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் பதிவு செய்த கட்சியாக உள்ளது. அதன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி வகித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுச் செயலாளர் அரசில் அங்கம் வகித்து தற்போது அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். எனவே ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை தவறில்லை என்று மூத்த சட்டத்தரணி என். சிறீகாந்த மன்றுரைத்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, சிவாஜிலிங்கத்தை எச்சரித்து 2 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது

(யாழ்.விசேட நிருபர் – மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment