கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிவட்டவான் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிவட்டவான் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

ருத்ரா

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிவட்டவான் மக்கள் இன்று புதன்கிழமையன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்ளிவட்டவான் பிரதான வீதியினை மறித்து இவ் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இறந்த உடல்களை அடக்கம் செய்ய பொது மயானத்தினை உருவாக்கி தாருங்கள், குடி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தாருங்கள், சட்ட விரோத வடி சாராயத்தினை நிறுத்தி தாருங்கள் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை பிரதேச செயலாளர், பிரதேச தவிசாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவர தயார்படுத்தியிருந்தனர். துரதிஸ்டவசமாக அவ்விடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் சமூகம் கொடுக்கவில்லை.

அவ் மகஜரில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது பொது மைதானம், மயானம் போன்றவற்றிக்கு அரச காணிகளை ஒதுக்கீடு செய்தல், பொதுமக்களின் குடியிருப்பு காணிகளை காலத்திற்கு காலம் வன இலாகா திணைக்களம் சுவீகரித்து எல்லைக் கல் போடுவதனை தடுத்து நிறுத்தல், யானை வேலி போடாமையினால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிகளையும், உடமைக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதனை தடுத்தல், சட்ட விரோத மதுபான விற்பனை மற்றும் மணல் அகழ்வினை தடுத்தல், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெறல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை தீர்வு கிடைக்கப்படவில்லையென கவலை தெரிவித்தனர். எனவே மேற்படி விடயங்களுக்கு நல்லதொரு தீர்வினை பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளை முள்ளிவட்டவான் மக்கள் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment