எமது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கியிலோ அரச நிறுவனங்களிலோ மோசடிகள் இடம்பெறவில்லை என்கிறார் அஜித் நிவாட் கப்ரால் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

எமது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கியிலோ அரச நிறுவனங்களிலோ மோசடிகள் இடம்பெறவில்லை என்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

எமது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கியிலோ அல்லது எந்த அரச நிறுவனங்களிலோ எத்தகைய மோசடியும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியுமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச வளங்களை தீயிட்டுக் கொளுத்தி நாட்டுக்கு 55 பில்லியனுக்கு மேல் நட்டம் ஏற்படுத்தியவர்களே தற்போது நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் தற்போது பேசுபவர்கள் அதனோடு சம்பந்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை ஏன் நாட்டுக்கு அழைத்து வர வில்லை என கேட்கின்றனர். எனினும் அவ்வாறு குற்றம் செய்தவரென தெரிந்தும் அவரை வெளிநாட்டுக்கு ஏன் போக விட்டனர் என நான் கேட்க விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் அரசாங்கம் அபிவிருத்தி பயணத்தை தொடரும் என தெரிவித்த அவர் நாட்டின் தொழிற்சாலை கைத்தொழில் பேட்டைகளை மீள கட்டியெழுப்பி பொருளாதாரத்தை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை நிறைவு செய்து பதில் அளித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எமது அரசாங்க காலத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊழியர் சேமலாப நிதியத்தில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் எனினும் அதில் லாபம் ஏற்படுத்தப்பட்ட பகுதிகளை அவர்கள் குறிப்பிடவில்லை உண்மையில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மில்லியன் லாபமாக உள்ளதை குறிப்பிடாமல் சுமார் 3000 மில்லியனை நட்டமாக கொண்ட துறைகளை மாத்திரமே குறிப்பிடுகின்றனர்.

கிளர்ச்சிக் காலத்தில் தபால்களை தீயிட்டுக் கொளுத்தி தொலைத்தொடர்பு நிலையங்களையும் பஸ் நிலையங்களையும் ரயில் நிலையங்களையும் ரயில் பெட்டிகளில் தீயிட்டுக் கொளுத்தி நாட்டுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு 55 பில்லியன் நட்டம் ஏற்படுத்தியவர்களை தற்போது நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad