தேங்காய் விலை சர்ச்சைக்கு நுகர்வோர் அதிகார சபையே பதிலளிக்க வேண்டும், தம்மால் எதனையும் கூற முடியாது என்கிறார் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

தேங்காய் விலை சர்ச்சைக்கு நுகர்வோர் அதிகார சபையே பதிலளிக்க வேண்டும், தம்மால் எதனையும் கூற முடியாது என்கிறார் கெஹெலிய

(நா.தனுஜா) 

தேங்காயின் பருமனுக்கு அமைவாக அதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு நுகர்வோர் அதிகார சபையே பதிலளிக்க வேண்டும் என்றும் தம்மால் எதனையும் கூற முடியாது என்றும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது தேங்காயின் பருமனுக்கு அமைவாக அவற்றின் விலைகளை நிர்ணயிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதில் இலங்கையில் பயன்படுத்தப்படும், ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவீடுகளான மீற்றர், சென்ரிமீற்றர் என்பன பயன்படுத்தப்படவில்லை. எனவே இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர், 'தேங்காயின் விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகார சபையினாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. நாம் இங்கு அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காகவே வந்திருக்கின்றோம். எனவே இதுபற்றி நுகர்வோர் அதிகார சபையிடம் தான் கேள்வி எழுப்பவேண்டும். எனினும் இது குறித்து அவர்களுக்கு நாம் அறிவிக்கின்றோம்' என்று பதிலளித்தார். 

எனினும் நாட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற ஓர் நுகர்வுப் பொருளான தேங்காயின் விலையில் ஏற்படுத்தப்படும் மாற்றம் தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லையா என்று மீண்டும் கேள்வி எழுப்பப்பட்ட போது, அது குறித்து ஆராயப்பட்டதென்று பதிலளித்தார். 

இந்த நடவடிக்கைகயினால் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

அதுமாத்திரமன்றி தேங்காயின் பருமனுக்கு அமைவாக அவற்றுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து உங்களைப் போன்றே எங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். 

எனினம் இது குறித்து நுகர்வோர் அதிகார சபை மற்றும் அதற்குரிய அமைச்சு ஆகியவற்றிடமே கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment