கைதாவதை தவிர்ப்பதற்கு சீனாவில் இருந்த அவுஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் தப்பியோட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

கைதாவதை தவிர்ப்பதற்கு சீனாவில் இருந்த அவுஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் தப்பியோட்டம்

கைது செய்யப்படலாம் என அச்சம் நிலவியதால் சீனாவில் இருந்து அவுஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடங்கி பல விவகாரங்களில் அவுஸ்திரேலியா - சீனா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அவுஸ்திரேலிய அரசு இணையத்தளங்களில் சைபர் தாக்குதல், வர்த்தகம் மோதல் போன்றவற்றால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பெரும் சந்தித்துள்ளது.

இதற்கிடையில், சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித் தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தது. இறுதியாக அந்த அவுஸ்திரேலிய பெண் செய்தித் தொகுபாளர் ஷேங் லியை சீன பொலிசார் கடந்த ஆகஸ்ட் 14ம் திகதி கைது செய்திருப்பது தெரியவந்தது. 

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஷேங் லி எந்த விதத்தில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்ற தகவலை சீனா தெரிவிக்கவில்லை. 

கைது செய்யப்பட்ட ஷேங் லி-யை விடுதலை செய்ய வேண்டும் என அவுஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது. 

இந்நிலையில், அவுஸ்திரேலியாவை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் ஏபிசி மற்றும் ஏஎப்ஆர் ஆகிய செய்தி நிறுவனங்களின் கிளைகள் சீனாவிலும் உள்ளது. இந்த கிளைகளின் முக்கியப் பொறுப்பில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் சீனாவில் தங்கி தங்கள் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

ஆனால், சிஜிடிஎன் செய்தி தொகுப்பாளர் ஷேங் லி பொலிசாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. 

மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உங்களிடம் சில விசாரணை நடத்த வேண்டும் ஆகையால் பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி 2 பத்திரிக்கையாளர்களுக்கும் சீன அரசு கோரிக்கை விடுத்தது. 

இதனால் அச்சமடைந்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகிய இருவரும் சீனாவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கிருந்து அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர அவுஸ்திரேலியா தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சீன அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

5 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் இரண்டு அவுஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல சீனா அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியையடுத்து தூதரக உதவியுடன் சீனாவில் இருந்து தப்பித்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகிய 2 பத்திரிக்கையாளர்களும் நேற்று அவுஸ்திரேலியா வந்தடைந்தனர்.

இந்த சம்பத்தை தொடர்ந்து சீனாவில் உள்ள அவுஸ்திரேலியர்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad