ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஊழியர்கள் போல் வந்து மின்கம்பி திருட்டு - இரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஊழியர்கள் போல் வந்து மின்கம்பி திருட்டு - இரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

ரெலிகொம் ஊழியர்கள் போல் வந்து மின்கம்பி திருட்டு-SLT Wire Theft-6 Arrested
ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்கள் என்ற போர்வையில் வந்து மள்வானை, வள்கம, கராபுகஸ் சந்தி பிரதேசத்தில் உள்ள ரெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு தொகை மின்கம்பிகளை திருடிச் சென்ற 6 நபர்களை கைது செய்துள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டிருந்த குறித்த மின்கம்பிகளை கடத்திச் சென்ற குறித்த 06 நபர்களில் இரு இராணுவ வீரர்களும் தனியார் ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் மூவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு நேற்று (13) திருடப்பட்ட மின் கம்பிகள் வெலிவேரிய பிரதேசத்தில் பழைய இரும்பு விற்பனை செய்யும் நிலையமொன்றில் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வயர்களை கொண்டு சென்ற டென் வீல் (பத்து சக்கர) லொறியொன்றையும், பட்டா லொறி யொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரவு நேரத்திலேயே இவ்வயர் தொகைகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இத்திருட்டு சம்பந்தமாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மும்முரமாக செயற்பட்ட பியகம பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி தனஞ்சய ராஜபக்ஷவினால் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள சகல CCTV கெமராக்களிலும் பதிவாகியுள்ள காட்சிகளை கண்காணித்து குறித்த லொறிகளின் இலக்கங்களை தேடிச் சென்று இச்சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர்கள் சியம்பலாபே வத்த, பேலியகொடை, வெலிவேரிய மற்றும் கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதோடு இவர்கள் மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவிருந்தனர்.

இச்சுற்றிவளைப்பில் பியகம பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.ஏ.சீ.எல் அமரசேகரவின் அறிவுறுத்தலுக்கிணங்க குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனஞ்சய ராஜபக்ஷ, சார்ஜெண்ட் பிரியந்த (45454), ஜயவர்த்தன (61849), கான்ஸ்டபிள் குணரத்ன (37826), சேனாநாயக்க (88674) மற்றும் தேதுனு (73099) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

(மள்வானை விசேட நிருபர் - ஹனபி)

No comments:

Post a Comment