விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர் மஹிந்தானந்த உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர் மஹிந்தானந்த உத்தரவு

யாழ் மாவட்ட சந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளால் அமைச்சரின் கவனத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டது. அதற்கமைய வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்று விவசாய பொருட்களை விற்பனை செய்யும் போது, சந்தைகளில் 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை நிறுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியாக அந்த கழிவு பணம்பெறும் நடவடிக்கையினை இடை நிறுத்துமாறு வடக்கு ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளரை அமைச்சர் பணித்ததோடு அவ்வாறு நிறுத்த தவறினால் பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு இலங்கை பூராகவும் உள்ள கமநல சேவை அமைப்புகளுக்கான களஞ்சியம் அடுத்த வருட பாதீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி தரப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

வடக்கில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குரிய தலைமை காரியாலய கட்டிடத்திற்கு அடுத்த பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், எனினும் மிக விரைவில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து புதிய கட்டட வேலைத்திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த கலந்துரையாடலில் கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் ஷீந்திர ராஜபக்ஷ, உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுனர் சார்ளஸ், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜனர இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள், விவசாய பணிப்பாளர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல சேவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad