மரண தண்டனை கைதி பிரேமலாலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் செல்லுபடியற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

மரண தண்டனை கைதி பிரேமலாலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் செல்லுபடியற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

TamilMirror.lk
(செ.தேன்மொழி)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதினால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போயுள்ளதுடன், அவருக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவே கருதப்படும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டக்குழு உறுப்பினர் ரஜித் கீர்த்தி தென்னகோன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர், இந்த கடிதத்திலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இரத்தினபுரி நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு அரசியலமைப்பின் 89 ஆவது சரத்துக்கமைய மரண தண்டனை விதிக்கப்பட்ட தினத்திலிருந்து பிரஜாவுரிமை இல்லாமல் போயுள்ளது. அதற்கமைய எதிர்வரும் தேர்தலில் அவருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாது.

இதேவேளை அரசியலமைப்பின் 91 ஆவது சட்டத்திற்கமைய வாக்களிப்பதற்கான உரிமை இல்லாத ஒருவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பட்டியலில் இலக்கம் 13 இல் போட்டியிடும் வேட்பாளர், பிரேமலால் ஜயசேகர சட்டத்திற்குள் உள்வாங்கப்படாத வேட்பாளர் என்பதினால், அவருக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் செல்லுபடியாகாது என்பது, தேர்தல்கள் ஆணைக்குழு அறிந்துகொண்டுள்ள விடயமாகும்.

அதனால், பிரேமலால் ஜயசேகரவின் வாக்குரிமை நீக்கப்பட்டுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையாகும். இது தொடர்பில் இரத்தினபுரி மாவட்டத்தின் தெரிவு அத்தாட்சி அதிகாரியிடம் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பிரேமலால் ஜயசேகரவுக்கு ஆதரவாக வழங்கப்படும் வாக்குகள் அனைத்தும் செல்லுபடியாகாது என்பதை தெரிவிக்க வேண்டியதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்பதையும் நினைவுக்கூற விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad