
(செ.தேன்மொழி)
பழமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழிக்க முயற்சிக்காமல், மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு மதிப்பளித்து அதன் தலைமைப் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுத்து, தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஹர்ஷன ராஜ கருணா அழைப்பும் விடுத்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகச்சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி கடந்து சென்றுள்ள ஓரிரு மாதங்களுக்குள் மக்கள் வழங்கியுள்ள ஆணையை நாங்கள் வரவேற்பதுடன், அதற்கு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு மக்கள் எமக்கு ஆதரவரை வழங்கியுள்ளனர். 54 உறுப்புரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இவர்களுக்காக நாங்கள் முன்னின்று செயற்படுவோம்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான எங்களது தொடர்பு தொடர்பில் பலரும் வினவி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் அவர்களது தீர்மானத்தை பொதுத் தேர்தல் ஊடாக தெரிவித்திருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பற்றுக் கொண்டவன் என்ற வகையில் எம்முடன் இணைந்து செயற்படுமாறு நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு சஜித்தே பொறுப்பானவர். அதனை மக்களும் உறுதிசெய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment