தேசிய உளவுச் சேவை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 26, 2020

தேசிய உளவுச் சேவை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: எனது ...
(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து கடந்த 2019 ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் தகவல் கிடைக்கப் பெற்றது முதல் பல தடவைகள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும், தாக்குதல்கள் நடாத்தப்பட இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அவருக்கு ஒரு போதும் தான் கூறவில்லை என, அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து கிடைத்த தகவல், உளவுத் தகவல் அல்ல எனவும் அது ஒரு தகவலாக மட்டுமே இருந்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பின்னர் சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது.

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு வரை நீண்ட, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் சாட்சியத்தை தொடர்ந்து, நேற்று முதல் அவரிடம் குறுக்கு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன, ஆணைக்குழுவின் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறும், தேசிய உளவுத் துறை முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்கவின் குறுக்கு விசாரணைகளுக்கும் பதில் அளித்தவாறு அரச உளவுச் சேவை முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார். நேற்றையதினம் 18 ஆவது நாளாக அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

நேற்று முன்தினம் 17 ஆவது நாளாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன சாட்சியம் அளிக்கும் போது, அவர் முன்னாள் ஜனாதிபதியின் பெஜட் வீதி உத்தியோகபூர்வ இல்லத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை பேணியமை தொடர்பிலான தொலைபேசி அழைப்பு விபரப்பட்டியலை மையப்படுத்தி, ஆணைக்குழுவின் தலைவரால் கேள்விகள் எழுப்பட்டன.

குறித்த தொலைபேசி விபரப்பட்டியலின் பிரகாரம், 2019 ஏபரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து, தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் தகவல் கிடைத்த பின்னர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன அப்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் பின்வருமாறு அழைப்புக்களை எடுத்து கலந்துரையாடியுள்ளார்.

2019 ஏபரல் 5 ஆம் திகதி மு.ப. 7.59 இற்கு 28 செக்கன்கள்

2019 ஏபரல் 8 ஆம் திகதி மு.ப. 7.18 இற்கு 17 செக்கன்கள்

2019 ஏபரல் 9 ஆம் திகதி மு.ப. 8.02 இற்கு 4 நிமிடங்கள் 14 செக்கன்கள்

2019 ஏபரல் 12 ஆம் திகதி மு.ப. 8.50 இற்கு 37 செக்கன்களும் அன்றைய தினமே பி.ப. 08.07 இற்கு 16 செக்கன்களும்

2019 ஏபரல் 13 ஆம் திகதி மு.ப. 6.27 இற்கு 15 செக்கன்கள்

2019 ஏபரல் 14 ஆம் திகதி மு.ப. 9.39 இற்கு 38 செக்கன்கள்

2019 ஏபரல் 15 ஆம் திகதி மு.ப. 7.47 இற்கு 3 நிமிடங்கள் 19 செக்கன்கள்

2019 ஏபரல் 20 ஆம் திகதி பி..ப. 6.16 இற்கு ஒரு நிமிடம் 28 செக்கன்கள்

மேற்படி தொலைபேசி அழைப்பு விபரங்கள் அடங்கிய விஷேட அறிக்கையை மையப்படுத்தி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், நிலந்த ஜயவர்தனவிடம் மேலும் பல கேள்விகளை தொடுத்தார்.

2019 ஏபரல் 4 ஆம் திகதி மு.ப. 6.50 இற்கு 10 நிமிடம் 40 செக்கன்கள்

2019 ஏபரல் 08 ஆம் திகதி மு.ப. 8.12 இற்கு 4 நிமிடங்கள்

2019 ஏபரல் 13 ஆம் திகதி மு.ப. 7.11 இற்கு 9 நிமிடங்கள் 11 செக்கன்கள்

2019 ஏபரல் 15 ஆம் திகதி மு.ப. 7.52 இற்கு 5 நிமிடம் 6 செக்கன்கள்

என பெஜட் வீதி முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உமக்கு அழைப்பு கிடைத்துள்ளதல்லவா என இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன இருக்கலாம் என்றார்.

இதன்போது, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து ஜனாதிபதி அல்லாது வேறு எவரேனும் உமக்கு அழைப்பினை எடுப்பார்களா என ஆணைக்குழுவின் தலைவர் மீளவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன், சிலர் தன்னை தொடர்புகொள்ள முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம் ஊடாக முயற்சிப்பர் என தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி தற்கொலை தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு உளவுச் சேவை தகவலினை தொடர்ந்து, பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியை தொடர்புகொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை தொலைபேசி அழைப்பு விபரப்பட்டியல் ஊடாக தெளிவாகிய நிலையில், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அப்போதைய ஜனாதிபதிக்கு தாக்குதல் குறித்த முன் கூட்டிய தகவலை தெரிவித்தீரா? என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன இல்லை என பதிலளித்தார்.

அத்துடன், 2019 ஏபரல் 4 ஆம் திகதி வட்ஸ் அப் ஊடாக கிடைக்கப் பெற்ற குறித்த தகவல் ஒரு தகவல் மட்டுமே எனவும், அது தொடர்பில் மேலதிக விசாரணை நடாத்தி ஏப்ரல் 7 ஆம் திகதியே முழுமையான உளவுத் தகவலாக அதனை மாற்ற முடிந்ததாகவும் அதனாலேயே, குறித்த ஏப்ரல் 4 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற தகவலை ஜனாதிபதிக்கு கூறவில்லை எனவும் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் 2019 ஏபரல் 15 அல்லது 16 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு குழுக்கூட்டம் நடாத்தப்பட்டிருந்தால், அங்கு வைத்து அந்த தகவலை பறிமாற சந்தர்ப்பம் இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்கடடினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 17 ஆம் நாளாக சாட்சியளிப்பு நிறைவுக்கு வரும் தருவாயில் மேற்படி விடயங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் 'நான் யாரையும் காப்பாற்றுவதாக எண்ண வேண்டாம்' என தெரிவித்தார்.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் ' நாம், நீங்கள் எவரையும் காப்பாற்றுவதாக கூறவில்லையே' என தெரிவித்தார். அதற்கு மீளவும் நிலந்த ஜயவர்தன ' சிலர் கூறுகின்றார்கள்' என குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று 18 ஆவது நாளாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்த நிலையில், அவரிடம் அவரின் சாட்சியத்திலிருந்து குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. நேற்று முன்னாள் தேசிய உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க குறுக்கு விசாரணை செய்தார்.

'ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுச் சேவை ஊடாக கிடைத்தது உளவுத் தகவல் அல்ல. அத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து எமக்கு உளவுத் தகவல் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட வெளிநாட்டு உளவுச் சேவை, சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் எந்த விடயத்தையும் அரிந்திருக்கவில்லை. அவர்கள், சாத்தியமான ஒரு பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவல் மட்டுமே கொடுத்தனர். அந்த தகவலை பகுப்பாய்வு செய்து, மீள விசாரணை செய்து தேசிய உளவுச் சேவையே அதனை உளவுத் தகவலாக மாற்றியது. ' என்றார்

No comments:

Post a Comment