
(எம்.ஆர்.எம்.வஸீம்)
விக்னேஸ்வரனின் கருத்துக்களை பாராளுமன்ற ஹென்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டிய தேவையும் இல்லை என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனை தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அதனை பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாருக்கும் முடியாது. சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் பாராளுமன்ற ஹென்சாட் அறிக்கையில் பதிவாகி இருக்கின்றது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெரிவிக்கும் உரிமை இருக்கின்றது. அதனடிப்படையிலே சபாநாயகர் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை.
அத்துடன் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அனைவரும் இணங்க வேண்டும் என்றில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment