கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இச்செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவர் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது சம்பந்தமாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும் அது தொடர்பில் அமைச்சரவை பத்திரங்களை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த விடயம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுமுன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment