முஸ்லிம்களை நசுக்கி பேரினவாதிகளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடனே ராஜபக்ஷ் அரசாங்கம் செயற்படுகின்றது - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

முஸ்லிம்களை நசுக்கி பேரினவாதிகளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடனே ராஜபக்ஷ் அரசாங்கம் செயற்படுகின்றது - முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம்களை நசுக்கி பேரினவாதிகளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடனே ராஜபக்ஷ் அரசாங்கம் செயற்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ நாம் அதற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். அதனால் பாராளுமன்றத்தில் இதனை எதிர்க்கொள்ளக் கூடிய தலைமைகளை அனுப்பும் பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மத்திய கொழும்பு புதுக்கடையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிம்களை நசுக்கி பேரினவாதிகளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடனே ராஜபக்ஷ் அரசாங்கம் செயற்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ நாம் அதற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். 

பாராளுமன்றத்தில் இதனை எதிர்க்கொள்ளக் கூடிய திறனுடைய தலைமைகளை அனுப்ப வேண்டும். அதனால் இந்த தேர்தலை எமது சமூகத்தினதும், வருங்கால பிள்ளைகளுடைய எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக கருதவேண்டியிருக்கிறது.

மேலும் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதளின் பின்னர் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் செய்ததுடன், முஸ்லிம் அரசியல் தலைவர்களை இலக்குவைத்து பல்வேறு வகையிலும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர். 

ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அசாத்சாலி உள்ளிட்டவர்களையும் என்னையும் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தி விமல் வீரவங்ச, உதய கம்பன்பில, மஹிந்தானந்த அளுத்கமகே, விஜயதாஸ ராஜபக்ஷ போன்றவர்கள் எமக்கெதிராக பிரசாரங்களை முன்னெடுத்தனர். 

இவர்களின் குற்றச்சாட்டுக்களை, நான் பல அரசியல் விவாதங்களுக்கு சென்று முறியடித்தேன். இதனால், சஹ்ரானுக்கு நான் உதவி செய்ததாகவும், முஸ்லிம் அடிப்படை வாதத்தை ஊக்குவிப்பதாகவும் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். என்னை தீவிரவாதி என்றும் கூறினர்.

என்னுடைய மகன் சிங்கள மொழியில்தான் படித்துக்கொண்டிருக்கிறார். 16 வயதுடைய அவர் பாடசாலைக்கு செல்ல முடியாது இரண்டு வாரங்கள் பின்வாங்கினார். ஏனெனில், அவருடைய சக மாணவர்களும், சில ஆசிரியர்களும் என்னை பற்றி இனவாத கருத்து தெரிவித்து அவரை மன உலைச்சலுக்கு ஆளாக்கியிருக்கின்றனர். 

இவ்வாறு பல வகையிலும் நாம் பாதிக்கப்பட்டும் சமூகத்தின் முன்னால் இதை தெரிவிக்கவில்லை. இன்றும் இந்த அரசாங்கம் என்னை எப்படியாவது கைது செய்யவே முயற்சித்துக் கொண்டிருக்கின்றுது.

மேலும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது வசீம் தாஜுதீனின் மரணம் குறித்து பேசப்பட்டது. இது குறித்து நான் குரலெழுப்பும்போது, அரச தரப்பினர் என்மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். தாஜுதீன் விவகாரம் பற்றி கதைக்க வேண்டாம் எனவும் அச்சுறுத்தினர். 

அச்சுறுத்தல்கள் எந்த பக்கத்திலிருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் துணிவுடன் குரல் கொடுத்த வரலாறு எமக்கு இருக்கிறது. நாம் ஒருபோதும் சமூகத்தை விட்டுக்கொடுத்ததில்லை.

அதனால் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ மத்திய கொழும்புக்கு ஆற்றிய சேவைகள் அவரின் மரணத்திற்கு பின்னர் ஸ்தம்பித்துவிட்டன. எனவே நிறுத்தப்பட்ட கொழும்பின் அபிவிருத்தியை எமது பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஊடாக மீள கொண்டு செல்லவே எமது பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment