கொரோனா நோயாளிகளுக்கிடையில் மோதல் : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி! - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

கொரோனா நோயாளிகளுக்கிடையில் மோதல் : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Support quarantine efforts - Army | Daily News
(எம்.மனோசித்ரா)

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், செவ்வாய்கிழமை புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

இதன்போது ஐவர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெறுவதற்காக பொலன்னறுவையிலுள்ள வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த நபர்களுக்கிடையில் மோதல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் அல்லது விஷேட காரணங்கள் எவையும் இல்லை. இவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் புனர்வாழ்வு பெற்று வந்தவர்களாவர். எனவே அவர்களது மனநிலை சற்று பதற்றமான நிலைமையிலேயே காணப்படும். இதுவே முரண்பாட்டிற்காக காரணமாகும்.

எனினும் தற்போது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்கு அமைதியான சூழல் நிலவுகின்றது என்றார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் 363 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad