(இராஜதுரை ஹஷான்)
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் சேவையாற்ற 15 ஆயிரம் பட்டதாரிகளை தொழில் பயிலுநர் அடிப்படையில் இணைத்துக் கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும். உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பங்குப்பற்றும் மேலதிக வகுப்பு, பரீட்சைக்கான கருத்தரங்கில் ஒரு வகுப்பில் 500 மாணவர்கள் இருப்பதற்கு அனுமதிக்கபட வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளேன் என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்குதல் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்கள் மற்றும் பயிற்சி வழங்கும் நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி தொடக்கம் தொழில் நியமன கடிதங்கள் அரச நிர்வாக சேவை அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டன.
பொதுத் தேர்தலுக்கான திகதி குறிப்பிட்டுள்ளமையினால் தொழில் நியமனங்களை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மார்ச் மாதம் 2 ஆம் திகதி குறிப்பிட்டமையினால் நியமனங்கள் வழங்குதல் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டன. அதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 47 ஆயிரம் பேருக்கு தொழில், பயிற்சி நியமன கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 7 ஆயிரம் பேருக்கான நியமனக் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டியுள்ளதெனவு, அவர்களுக்கான கடிதங்களை அனுப்புவதற்கு அனுமதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கல்வி அமைச்சு கடிதமொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.
பாடசாலைகயின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. மாணவர்களின் பாடத்திட்டத்தை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இலங்கையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ஆசிரியர்கள் விடுமுறையில் உள்ளதுடன், மேலும் 10 ஆயிரம் பேர் வெளிக்கள கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகம் தருவது இல்லை. இந்நிலை எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தால் கல்வி நடவடிக்கைகளில் மேலும் பாதிப்பு செலுத்தும். பாடசாலைக்கு சமூகம் தராத ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்பவே 15 ஆயிரம் பட்டதாரிகளை இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் பயிலுநர் சேவையில் இணைத்துக் கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசியல் காரணிகளை பின்னணியாக கொள்ளாமல் பொது காரணிகளை அடிப்டையாகக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
அத்தோடு, இனிவரும் நாட்களில் கல்வியற் கல்லூரிகளில் ஒரு பாடத்தில் மாத்திரம் சித்தியடையாத மாணவர்களுக்கான நியமனங்களை இடைநிறுத்தம் செய்வது தவறான தீர்மானமாகும். தான் தெரிவு செய்த பாடங்களில் ஒன்றை மாத்திரம் சித்தியடைய தவறியவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படுவதோடு, குறித்த காலப்பகுதியில் சித்தியடைய தவறிய பரீட்சைக்கு மீள தோற்றவும் வாய்ப்பு வழங்கப்படும்.
கல்விச் செயற்பாடுகளுக்காக நிறுவப்பட்டுள்ள விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கீழ் சர்வதேச பாடசாலைகளை வரையறுக்கும் செயற்பாடுகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. என்றார்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மேலதிக வகுப்புகளில் கற்றல் நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். தற்போது ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் மாத்திரமே சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இது ஒரு நெருக்கடி நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் பங்குப்பற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் 500 பேர் கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்களின் நலன் கருதி 100 ஆக வரையறுத்துள்ள எண்ணிக்கையை 500 ஆக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேம். 500 ஆக அதிகரிக்கும் பட்சத்தில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அவ்விடத்தில் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment