காங்கேசன்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு அங்கஜனால் தடுத்து நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 25, 2020

காங்கேசன்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு அங்கஜனால் தடுத்து நிறுத்தம்

முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதனின் தலையீட்டினால் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் அந்தப் பிரதேச மக்கள் முன்னாள் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதற்கு முன்னர் தாம் பலரிடமும் இது தொடர்பில் முறையிட்ட போதும் தமக்கு எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லையென இதன் போது பிரதேச மக்கள் அங்கஜன் ராமநாதனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவை உடன் தொடர்பு கொண்ட அங்கஜன் ராமநாதன் இந்த விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்த யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அங்கஜனிடம் உறுதியளித்தார்.

அத்துடன் இதனுடன் தொடர்புடைய இராணுவத்தினர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.,

சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை நிவர்த்திக்கவும் இனிமேல் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாதெனவும் இதன் போது யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி இதன் போது அங்கஜன் ராமநாதனிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் தமது கோரிக்கைக்கு செவி சாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்திய யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனுக்கும் அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத்தளபதிக்கும் பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment