அரசியலமைப்புப் பேரவையின் 80வது கூட்டம் நேற்று (24) மாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, தலதா அத்துகோரள ஆகியோரும், சிவில் சமூக உறுப்பினர்களான யாவிட் யூசுப், பேராசிரியர். நாகநாதன் செல்வகுமார், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர்களாக இருந்த நிஹால் பொன்சேகா மற்றும் துஷ்னி வீரக்கோன் ஆகியோரின் பதவி விலகலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்புப் பேரவையினால் கலந்துரையாடப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.
அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவிருந்த கலாநிதி ஜயந்த தனபால அவர்களின் பதவி விலகல் தொடர்பில் தலைவரினால் அரசியலமைப்பு பேரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன், கலாநிதி. ஜயந்த தனபால அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கிய விசேட சேவையும் இங்கு பாராட்டப்பட்டது. இந்த வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையின் ஏற்பாடுகளுக்கு அமைய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் அதன் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரிகேடியர் பி.பி.ஜே.பெர்னான்டோ (ஓய்வுபெற்ற) அவர்களின் பெயர் குறித்தும் அரசியலமைப்புப் பேரவை கலந்துரையாடியது.
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலினால் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் அரசியலமைப்புப் பேரவைக்குக் கிடைக்கப்பெற்றிருந்த கடிதம் மற்றும் அது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட அவதானிப்பு அரசியலமைப்புப் பேரவையின் தலைவரினால், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன், அஹிம்சா விக்ரமதுங்கவினால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தின் பிரதி அரசியலமைப்புப் பேரவையின் தலைவரினால் அதன் உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அவதானிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்றும், இதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment