(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் இடம்பெறும் பாதாள உலக குற்றங்களாக கருதப்படும், திட்டமிட்ட குற்றங்களை வெளிநாடுகளில் இருந்து நெறிப்படுத்துவதாக நம்பப்படும், தப்பியோடியுள்ள பாதாள உலகத் தலைவர்கள் 10 பேரை கைது செய்ய இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் ஊடாக விஷேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உள்ள சர்வதேச பொலிஸ் கிளை ஊடாக இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்து இலங்கையில் அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்த சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
இவ்வாறான சர்வதேச நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், உள் நாட்டில் பிரதானமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் செயற்படும் 17 பாதஆள உலகக் குழுக்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அக்குழுக்களை முற்றாக ஒழிக்கும் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளை தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கூறினார்.
இதில் மேல் மாகாணத்தில் குறிப்பாக 11 பாதாள உலக கும்பல்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அக்குழுக்களை இலக்கு வைத்து மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட 7 வலயங்களில் அதிரடிப் படையின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவு வீரர்கள், உடன் நடவடிக்கை பிரிவு வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் உள் நாட்டில் இடம்பெரும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் விஷேடமாக விளக்கமளித்த குற்றம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவுகளின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, 'மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட 11 பாதாள குழுக்களில் 6 குழுக்கள் தற்போதும் செயலிழந்துள்ளன. அதன் தலைவர்கள் கைதானமை உள்ளிட்ட காரணங்கள் அவற்றுக்கு ஏதுவானதாக இருக்கலாம். எனினும் 5 குழுக்கள் சிறு சிறு அளவில் தற்போது செயர்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த தற்போது திட்டம் வகுப்பட்டுள்ளன. பதாள உலகத்தை முற்றாக அடக்க முடியும்.' என தெரிவித்தார்.
No comments:
Post a Comment