கடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி "Mayday, Mayday, Mayday" : இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து - விமானத்தின் பிரச்சினை தொடர்பில் விமானி அறிவிக்கவில்லை - விமான விபத்தில் இருவர் உயிர் தப்பினர் - நடந்தது என்ன? - News View

Breaking

Post Top Ad

Sunday, May 24, 2020

கடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி "Mayday, Mayday, Mayday" : இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து - விமானத்தின் பிரச்சினை தொடர்பில் விமானி அறிவிக்கவில்லை - விமான விபத்தில் இருவர் உயிர் தப்பினர் - நடந்தது என்ன?

பாகிஸ்தானின் கராச்சியில் நேற்றுமுன்தினம் (22) இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர், தான் எதிர்கொண்ட அனுபவம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் (PIA) நிறுவனத்திற்கு சொந்தமான எயார்பஸ் A320 வகை குறித்த விமானமானது, கராச்சியின் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதில், 97 பேர் மரணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விமானத்தில் 99 பயணிகள் உள்ளிட்ட 107 பேர் பயணித்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பயணிகள் விமான சேவை ஊழியர்கள் என மொத்தமான 99 பேரே அதில் பயணித்துள்ளனர்.

இதில் இரு பயணிகள் உயிர் பிழைத்திருந்தனர். 97 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒருவர், பஞ்சாப் வங்கியின் தலைவர் ஷாபர் மசூத் எனவும், மற்றைய நபர், மொஹம்மட் ஸுபைர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் விமானத்தின் முன்புறத்தில் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவரான, மொஹம்மட் ஸுபைர் தனது அனுபவத்தை தெரிவிக்கையில், விபத்து இடம்பெற்றபோது, தான் காணும் இடமெல்லாம் தீயாகவே இருந்தது என்று கூறியுள்ளார்.

விமானம் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், விமானத்திலுள்ள விமானி தொழில்நுட்ப கோளாறொன்றை தெரிவித்த, உரையாடல் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் விமானி, விமானத்தின் எஞ்சின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவித்ததோடு, ஆபத்தை அறிவிக்கும் வகையில் Mayday, Mayday, Mayday என கூறியதை அடுத்து, அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வணிக விமானங்களை மீண்டும் தமது பணிகளை ஆரம்பிக்க பாகிஸ்தான் அனுமதித்த சில நாட்களில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முஹம்மது சுபைர் எவ்வாறு தப்பினார்?
PK8303, Airbus A320 விமானமானது, 91 பயணிகள் மற்றும் எட்டு விமான ஊழியர்களுடன், லாகூரிலிருந்து கராச்சி நோக்கி பயணித்திருந்தது. இதில் பெருநாளை கொண்டாடும் முகமாக தங்களது சொந்த இடத்திற்கு சென்ற பெரும்பாலான பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் பயணித்துள்ளனர்.

இது கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 14:30 மணிக்கு (09:30 GMT) தரையிறங்க முற்பட்டுள்ளது.

சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த, ஸுபைர் இது தொடர்பில் தெரிவிக்கையில், விமானம் தரையிறங்க முயற்சித்ததாகவும் பின்னர் 10-15 நிமிடங்கள் கழித்து அது விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.

"விமானம் விபத்துக்குள்ளாகும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் விமானத்தை சுமூகமாகவே செலுத்தி வந்தனர்" என்றும் அவர் கூறினார்.

விபத்தையடுத்து சுயநினைவை இழந்த அவர், நினைவு திரும்பியபோது, ​​"எல்லா திசைகளிலிருந்தும் குழந்தைகளினதும் பெரியவர்களினதும் அலறல் சத்தங்களை கேட்க முடிந்தது. நான் அங்கு பார்த்ததெல்லாம் நெருப்பாகவே இருந்தது. என்னால் எந்த நபர்களையும் காண முடியவில்லை. அவர்களின் அலறல்களையே கேட்டேன்" என்று கூறினார்.

"நான் எனது சீட் பெல்ட்டைத் விடுவித்த போது சிறு வெளிச்சத்தைக் கண்டேன். உடனே நான் அந்த வெளிச்சத்தை நோக்கிச் சென்றேன். நான் சுமார் 10 அடி (3 மீற்றர்) உயரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே குதித்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.

விமானம் விபத்துக்குள்ளான காரணம்?
அது விபத்திற்குள்ளான, குறித்த மாதிரி கொலனி குடியிருப்பு பகுதியை அடைந்த விமானம் அதன் ஓடுபாதையை அடைய அதற்கு குறைவான தூரமே இருந்தது. தொலைக்காட்சி காட்சிகளில் மீட்புக் குழுக்கள் சன நெரிசல் மிக்க தெருக்களில் வருவதை காணக்கூடியதாக இருந்தன. ஏராளமான கார்கள் அங்கு தீக்கிரையாகியிருந்தன.

நேரில் கண்ட சாட்சியான மொஹம்மட் உசைர் கான் இது தொடர்பில் தெரிவிக்கையில், தீடிரென ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் உடனே வீட்டிற்கு வெளியே சென்று பார்த்ததாகவும் தெரிவித்தார். "கிட்டத்தட்ட நான்கு வீடுகள் முற்றிலுமாக இடிந்து வீழ்ந்திருந்தன, பாரிய தீ மற்றும் புகையே அங்கு காணப்பட்டன" என்று அவர் கூறினார். "அவர்கள் எனது அயலவர்கள், உண்மையில் அது பயங்கரமான சம்பவம். அதை என்னால் விபரிக்க முடியாது."

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விமானி - கட்டுப்பாட்டறை உரையாடல்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கும் குறித்த விமானத்தின் விமானிக்கும் இடையிலான உரையாடல் பதிவொன்றை பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் விமானி, விமானத்தின் எஞ்சின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

அப்படியானால் சக்கரங்கள் இன்றிய தரையிறக்கத்தை (Belly Landing) மேற்கொள்ளப் போகின்றீர்களா என கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்காத விமானி, ஆபத்தை அறிவிக்கும் வகையில் Mayday, Mayday, Mayday என கூறியதை அடுத்து, அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட படங்களில் விமானத்தின் இரு என்ஜின்களின் அடியிலும் தீக்காய அடையாளங்கள் காணப்படுகின்றன.

விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அது, விமான விபத்து மற்றும் விசாரணை சபையின் தலைவர், எயார் கொம்மடோர் மொஹம்மட் உஸ்மான் கானி தலைமையிலான விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு, முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை (PIA), விமானி, விமானத்தை கையாண்ட விதம் தொடர்பில் பாரிய கேள்வி எழுந்துள்ளதாக, தெரிவித்துள்ளது.

அதற்கமைய, PK-8303 விபத்துக்கு, விமானியா அல்லது தொழில்நுட்ப பிரச்சினையா காரணம் என்பது தொடர்பில் பாகிஸ்தானின் விசாரணைக்குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றது.

இவ்விமானம் 2014 ஆம் ஆண்டில் சேவையில் இணைந்ததாகவும், கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட அதன் வருடாந்த செயற்றிறன் பரிசோதனையில் சித்தியடைந்ததாக குறித்த விமான சேவை தெரிவித்துள்ளது.

இரண்டாம் முறை தரையிறக்கத்தின்போதே விபத்து
ஆயினும், குறித்த விமானத்தின் விமானி கெப்டன் சஜாத் குல், விமானத்தை முதன் முறை தரையிறக்க முயற்சித்த போது குறித்த எயார்பஸ் A320 இனது என்ஜின்கள், மூன்று தடவைகள் ஓடுபாதையை உராய்த்துள்ளதோடு, இது தீப்பொறியையும் ஏற்படுத்தியுள்ளதாக, அந்நாட்டு சிவில் விமான அதிகார சபையின் (CAA) அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, விமானத்தின் வலது எஞ்சின் ஓடுபாதையின் 4,500 அடி தூரத்திலும் இடது எஞ்சின் 5,500 அடி தூரத்திலும் உராய்ந்து சென்றுள்ளதாக, CAA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, விபத்தை தவிர்க்கும் வகையில் விமானி மீண்டும் விமானத்தை வானை நோக்கி (go-around) செலுத்தியுள்ளார். இதன்போது தரையிறங்கும் கியரில் பிரச்சினை உள்ளமை தொடர்பில், ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் விமான கட்டுப்பாட்டறைக்கு விமானி அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறை தரையிறக்கத்தில் தரையை தட்டிய எஞ்சின்கள்
விமானம் முதன் முறை தரையை அடைந்ததைத் தொடர்ந்து, எஞ்சினின் எண்ணெய்த் தாங்கி மற்றும் எரிபொருள் பம்பி ஆகியன சேதமடைந்து, கசிவு ஏற்பட்டிருக்கும் எனவும் இதன் காரணமாக, அதன் எஞ்சினின் உதவியுடன், விமானியினால் விமானத்தின் பாதுகாப்பை பேணும் உரிய உந்துதலையும், வேகத்தையும் அடைய முடியாமல் போயிருக்கலாம் என, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விமானி முதன் முறை விமானத்தை தரையிறக்க முயற்சித்தமை தோல்வியடைந்ததை அடுத்து, விமானி சுற்றி செல்லுதல் (go-around) முடிவை தன்னிச்சையாக எடுத்தமை தொடர்பில், அவ்வறிக்கையில் அவர் மீது குறை கூறப்பட்டுள்ளது. அவர், சுற்றி செல்லுதல் முடிவை எடுத்த பின்னரே தரையிறங்கும் கியர் இயங்கவில்லை என கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ளப் போவதாக (emergency landing) விமானி அறிவிக்கவில்லை எனவும் CAA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உரிய உயரத்தை அடைய முடியாமை
இதேவேளை, விமானி உடனான உரையாடலில் உயரத்தை குறைக்குமாறு வழங்கப்படுகின்ற உத்தரவுக்கு அமைய, விமானியினால் உரிய உயரத்தை பேண முடியாமல் போகின்றமை தெளிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது எஞ்சின்கள் உரிய முறையில் இயங்கவில்லை என்பதை உணர்த்துவதோடு, இது விமானம் திடீரென வெடித்தமைக்கு காரணமாக இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் கட்டுப்பாட்டறையின் செயற்பாடு தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்விபத்தைத் தொடர்ந்து PIA விமான சேவை தனது உள்ளூர் பயண சேவைகளை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

97 பேர் பலி
உள்ளூர் அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, 97 பேரின் இறப்புகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட சேதம விபரம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. ஆயினும் பலியானவர்களில் 19 பேரே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விமானத்தின் பயணித்தவர்களின் பட்டியலில், தொலைக்காட்சி அலைவரிசையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான அன்சார் நக்வி மற்றும் பஞ்சாப் அனர்த்த முகாமைத்துவ சபையின் முன்னாள் தலைவர் காலித் ஷெர்டில் ஆகியோரும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் விமான விபத்துகள்
கடந்த 2010 ஆம் ஆண்டில், தனியார் விமான நிறுவனமான எயார்ப்ளூ (Airblue) இனால் செயற்படுத்தப்படும் விமானமொன்று இஸ்லாமாபாத் அருகே விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 152 பேரும் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான விமான பேரழிவாக பதிவாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் போஜா எயார் (Bhoja Air) நிறுவனத்தின் போயிங் 737-200 வகை விமானம் ராவல்பிண்டியில் தரையிறங்க முற்பட்ட வேளையில் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதனால் அதிலிருந்த 121 பயணிகள் மற்றும் ஆறு விமான சேவை பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ் (PIA) விமானம் வடக்கு பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமாபாத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad