அரச உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - பிரபா கணேசன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

அரச உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - பிரபா கணேசன்

அரச உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை பார்க்கும் போது இந்த சமிஞ்சை சற்று சறுக்கலாகவே இருக்கிறது. இதனை சரியான விடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்த அரசாங்கம் பல அரச உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை பார்க்கும் போது இந்த சமிஞ்சை சற்று சறுக்கலாகவே இருக்கிறது. இது சரியான ஒன்றாக எமக்கு படவில்லை. இது சம்மந்தமாகவும் எதிர்காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் பேசி இராணுவ மயமாக்கல் இலங்கையில் நடைபெறுவதை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கும் எமது முயற்சிகளை மேற்கொள்வோம்.

அதுமட்டுமல்ல, பல விடயங்களில் வன்னி மண்ணில் மாற்று சமூகத்தை நாம் மதிக்கும் அதேவேளை, விகிதாசாரத்திற்கேற்ப அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டுமே தவிர, கடந்த காலத்தில் தமிழ் மக்களை விட ஏனைய மாற்று சமூகங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டன. 

உயர் அதிகாரிகளாக மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டு எமது வன்னி மண் காப்பாற்ற பட வேண்டும். பலாத்கார குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ்சிற்கு பின்னரான நிலையில் ஒரு இறுக்கமான அரசாங்கம் எமது நாட்டிக்கு இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதேநேரம் சமூக அதிகாரிகளாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை சரியான விடயமாக நான் பார்க்கவில்லை. 

அதேவேளை, எமது நாட்டின் இறைமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்தவகையில் ஜனாதிபதி அவர்கள் மிகவும் திட சங்கற்பமாக தனது உரையில் தெளிவாக சொல்லியிருக்கிறார். வெளிநாட்டு அழுத்தங்களின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்று.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகத்தில் பாரிய சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை சுகாதார அமைச்சின் ஊடாக அந்த அதிகாரிகள் தான் முழுமையான முறையில் முடிவு எடுக்க வேண்டும். 

மாறாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கம் அரசியல்வாதிகளுக்கு இருந்தாலும் கூட நாட்டின் நிலமை மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இருப்பினும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறாது. எனவே தேர்தலை நடத்துவதற்கான சுகாதார நிலமை எப்படி இருக்கிறது என்பதை சுகாதார அதிகாரிகள் தான் கூற வேண்டும்.

கடந்த பொதுத் தேர்தலில் வன்னியில் சுமார் 60-62 வீத வாக்குப்பதிவே இருந்தது. கொரோனா தாக்கத்தால் இம்முறை 50 இற்கும் சற்றுக் குறைவான வாக்களிப்பு வீதமே இருக்கும். இப்படி வாக்களிப்பு வீதம் குறையும் பட்சத்தில் அது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.

வாக்களிப்பு வீதம் குறையும் பட்சத்தில் வன்னியில் இருக்கும் 15 வீத மாற்று சமூகத்தினர் வாக்களிப்பில் கலந்து கொள்வார்கள். தமிழ் மக்கள் தான் குறைவாக வாக்களிப்பார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து வாக்களிக்க வேண்டும்.

அத்துடன், தேர்தல் முடிந்த பின் ஏதோவொரு சிங்கள அரசாங்கம் தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அவர்களிடம் இருந்து தான் பெற வேண்டியுள்ளது. இதனால் சிங்கள கட்சிகளுடன் இணைந்து செயற்பட கூடிய கட்சிகள் வருமாக இருந்தால் அவர்களுடன் இணைந்து செயற்படவும் தயாராக இருக்கின்றோம் என்றார். 

வவுனியா தீபன்

No comments:

Post a Comment