யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குடத்தனை, மாளிகைகாடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (01) வெள்ளிக்கிழமை காலை அத்துமீறி நுழைந்த பருத்தித்துறை பொலிசார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான மூன்று பெண்கள் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு எடுத்து சென்ற நிலையிலேயே குறித்த பெண்கள் இருவரும் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து பொலிசார் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் மூவர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை, மாளிகைத்திடல் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் புகுந்தே பொலிசார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வீட்டிற்கு நேற்றுமுன்தினம் (30) வியாழக்கிழமை சென்ற பொலிசார் வீட்டு வளவினுள் நின்ற "கென்ரர்" ரக வாகனத்தை அத்துமீறி எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். வாகனத்தை பொலிசார் எடுத்துச் செல்ல முற்பட்டவேளை வீட்டில் இருந்தோர் அது தொடர்பில் கேட்ட போது, இந்த வாகனத்தில் கள்ள மணல் ஏற்றுவதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்று உள்ளன. அதனால் வாகனத்தை எடுத்துச் செல்கின்றோம் என கூறியுள்ளனர்.
அதற்கு வீட்டில் இருந்தோர் வாகனம் நீண்ட நாளாக இந்த இடத்திலையே தரித்து நிற்கிறது. வாகனத்தின் என்ஜனை தொட்டு பாருங்கள் அதில் சூடு இருக்கிறதா என பாருங்கள், வீட்டு வளவினுள் தரித்து நிற்கும் வாகனத்தை எவ்வாறு எடுத்துச் செல்ல முடியும் என பொலிசாரிடம் கேள்வி எழுப்பினர்.
அதனையும் மீறி பொலிசார் வாகனத்தை எடுத்து செல்ல முற்பட்ட போது, வீட்டாருக்கும் பொலிசாருக்கும், இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனை வீட்டில் இருந்த சிறுவன் கைத்தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். அதனை அவதானித்த பொலிசார், சிறுவனிடமிருந்து கைத்தொலைபேசியை பறித்து, காணொளியை அழித்ததுடன் சிறுவனை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.
அதனால் வீட்டில் இருந்தோர் அபய குரல் எழுப்ப அயலவர்கள் கூடியதனால் பொலிசார் காணொளி வெளியில் போகக்கூடாது எனவும், இங்கு நடந்த சம்பவம் தொடர்பில் எங்கேயும் முறைப்பாடு செய்யக்கூடாது என மிரட்டியதுடன், அவ்வாறு ஏதாவது தமக்கு எதிராக முறைப்பாடு செய்தால் கஞ்சா கடத்தல், கசிப்பு வழக்குகள் தொடருவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து வாகனத்தை எடுத்து செல்லாமல் திரும்பி சென்று இருந்தனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிசார், குறித்த வீட்டுக்கு சென்று, வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என வேறுபாடு இன்றி மூர்க்கத்தனமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொலிசாரின் தாக்குதலில் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
வீட்டினுள் பொலிசார் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியமையால் வீட்டில் இருந்தோர் அவலக்குரல் எழுப்பியபோது அயல் வீட்டார்கள் குறித்த வீட்டில் இருந்தோரை மீட்க சென்ற போது அவர்கள் மீதும் பெண்கள், வயோதிபர்கள் என்ற வேறுபாடு இன்றி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.
தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமடைந்த பெண் உட்பட மூன்று பெண்களும் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, பெட்டன் பொல்லினாலும், துப்பாக்கியினாலும் தனது அம்மாவை தாக்கியதாக, சிறுமி ஒருவர் தெரிவித்ததோடு, வயிற்றில் காலால் உதைத்தாகவும் தெரிவித்தார்.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
தினகரன்
No comments:
Post a Comment