போராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி - குணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

போராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி - குணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கை

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம், வாழமலை பகுதியில் இன்று (26) காலை கம்பி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கரும்புலி, கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே 7 வயதுடைய 6 அடி நீளமுடைய ஆண் கரும்புலி இன்று (26) அதிகாலை சிக்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பில் தோட்ட மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். அதன் பின்னர் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், கரும்புலியை உயிருடன் மீட்பதற்காக, மிருக வைத்திய பிரிவினரின் உதவி கோரப்பட்டதன்படி சம்பவ இடத்துக்கு மிருக வைத்தியர்கள் விரைந்தனர்.

கம்பி வலையில் சிக்கியதால் காயம் ஏற்பட்டிருந்த கரும்புலியை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசி செலுத்தி அதிகாரிகள் மீட்டு, சம்பவ இடத்தில் வைத்தே அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பான முறையில் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கரும்புலி பூரணமாக குணடைந்த பின்னர் வனத்தில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தோட்டத்தில் கரும்புலி நெடுநாளாக நடமாடி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் நாய், ஆடு, கோழி என்பவற்றை வேட்டையாடி உட்கொண்டுள்ளதுடன், மனிதர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளது. 

இவ்வகையான சில புலிகள் மேலும் இருக்கலாம் என மக்கள் அஞ்சுவதோடு, அவற்றிடமிருந்து தம்மையும் கால்நடைகளையும் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கரும்புலி இனம் கடந்த ஜூன் 20 ஆம் திகதி மஸ்கெலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இனத்தை சேர்ந்த அரியவகையான புலியொன்றே இன்று சிக்கியுள்ளது. இது பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கினம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

(ஹற்றன் நிருபர் - ஜி.கே. கிஷாந்தன்)

No comments:

Post a Comment