மக்களை ஒன்று கூட்டி மத நிகழ்வு நடாத்திய போதகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, May 16, 2020

மக்களை ஒன்று கூட்டி மத நிகழ்வு நடாத்திய போதகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்) 

மாரவில நகரில், மக்களை ஒன்று கூட்டி மத நிகழ்வொன்றினை நடாத்திய போதகர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று (16.05.2020) நண்பகல் மாரவில பொலிஸாரும் மஹவெவ பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடாத்திய விஷேட சுற்றி வலைப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மஹவெவ பொது சுகாதார பரிசோதகர் பி.எம். வஜிர நிலந்த தெரிவித்தார். 

இன்றைய தினம் சனிக்கிழமை நண்பகல், மாரவில நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் மக்கள் ஒன்று கூடி மத போதனை நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு பிரதேச மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 

அதன்படி, ஸ்தலத்துக்கு பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் சென்றுள்ளனர். இதன்போது நான்கு சிறுவர்கள் உள்ளடங்களாக 27 பேர் அங்கு ஒன்று கூடியிருந்தமையை பொலிஸார் கண்டறிந்தனர். இதில் 18 பேர் பெண்களாவர். 

பலர் குறைந்த பட்சம் முகக் கவசம் கூட அணிந்திருக்கவில்லை என கூறிய பொலிஸார், குறித்த கட்டிடத்துக்கு தற்போது சீல் வைத்துள்ளதாகவும், தனிமைப்படுத்தல், நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அந்நிகழ்வை ஏற்பாடு செய்த போதகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறினர். 

இவ்வாறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மத போதகருக்கு எதிராக, ஏற்கனவே மாரவில நீதிவான் நீதிமன்றில் ஒலி பெருக்கியை பயன்படுத்தி முன்னெடுத்த மத போதனை நிகழ்வொன்று தொடர்பிலும் வழக்கொன்று நிலுவையில் உள்ளதாக அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad