தனிமைப்படுத்தல், அரச வாகனத்தை பயன்படுத்தி மகளை அழைத்துச்சென்றமை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

தனிமைப்படுத்தல், அரச வாகனத்தை பயன்படுத்தி மகளை அழைத்துச்சென்றமை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் விளக்கம்

(ஆர்.யசி) 

எனது மகள் "கொவிட்-19" தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ளார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளரும், இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இப்போது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. நானும் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தெரிவித்தார். 

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பை முன்னெடுக்கும் தனிமைப்படுத்தலுக்கு உட்டுத்தப்பட்டதில் சிக்கல் இருப்பதாவும், அரச வாகனத்தை பயன்படுத்தி தனது புதல்வியை பேராசிரியர் ஹூல் அழைத்து வந்துள்ளார் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தனது பக்க நியாயம் என்ன என்பதை கூறிய அவர், 

எனது மகள் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் நீர்கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதற்காக நான் ஒன்ரேமுக்கால் இலட்சம் ரூபாய்கள் செலுத்தியுள்ளேன். இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்தவுடன் மருத்துவ பரிசோதனைகளில் எனது மகள் முழுமையாக ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ளார் எனவும் அவர் வீடு செல்ல முழுமையான உடல் தகுதியை பெற்றுள்ளார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் உறுதிப்படுத்திய மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளனர். 

அதுமட்டுமல்ல மகளின் தனிமைப்படுத்தல் நாட்கள் முடிந்த நேரம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காரணத்தினால் என்னால் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனது தனிப்பட்ட வாகனத்தில் செல்லவும் அனுமதி இல்லை. எனவே நான் எவ்வாறு இந்த பிரச்சினையை கையாள்வது என எம்மை நியமித்த அரசியல் அமைப்பு பேரவையிடம் அனுமதி கோரினேன். 

எனது போக்குவரத்திற்கு மாதாந்தம் நிதியும் வாகான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நான் பயன்படுத்தும் வாகனத்தை எடுத்துக்கொண்டு நீர்கொழும்பு செல்லுமாறு அரசியல் அமைப்பு பேரவை எனக்கு அனுமதி வழங்கியது. அவர்களின் அனுமதியை பெற்று நெருக்கடியான சூழலில் எனக்கு மாற்று வழிமுறையொன்று இல்லாத காரணத்தினால் இவ்வாறு செயற்பட்டேன். 

எனினும் நான் நீர்கொழும்பில் இருந்து வீடு திரும்பும் வரையில் ஒவ்வொரு சோதனை சாவடியிலும் எனது வாகனம் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. நான் காரணிகளை தெரிவித்த போது எனது வாகன இலக்கத்தை சகல சோதனை சாவடிகளுக்கும் கொடுத்துள்ளதாகவும் வாகனம் வரும்போது நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் எனவும் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது ஆனால் என்ன காரணம் என ஒன்றும் தெரியவில்லை என சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

நான் வீட்டுக்கு வந்தவுடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் வீட்டிருக்கு வந்து எனது மகளிடமும் என்னிடமும் விசாரணை நடத்தினார். நாங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பாக நான் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். 

எனது உடல்நிலை குறித்து சுகாதார அதிகாரியே அவ்வாறு ஏதேனும் காரணிகள் இருப்பின் கூற வேண்டும். மாறாக பொலிசார் கூறுகின்றனர். என்னிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் நான் முன்வைத்தேன். பின்னர் எனது வாகன சாரதி நேற்றைய தினம் மூன்று மணி நேரம் பொலிசாரால் விசாரிக்கப்பட்டுள்ளார். நான் எங்கு சென்றேன், யாரை சந்தித்தேன் என்ற கேள்விகளை அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்திற்கு நான் செல்லவில்லை, ஆனால் வீடியோ காணொளி மூலமாக நான் கூட்டத்தில் காரணிகளை தெரிவித்தேன். அப்போது எனது தரப்பு விடயங்களை முன்வைத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளதாக தெரிவித்தனர். ஆகவே என்னை இலக்கு வைத்து தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனது வாயை மூட வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment