கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சனிக்கிழமை சீனா நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
உலகின் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கியது. மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பின் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று (04.04.2020) துக்கதினத்தை அனுசரிக்கும் நாளாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதன்படி நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அந்நாட்டுத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுள்ளது.
அயல்நாடுகளில் உள்ள தூதரகங்களிலும் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படடுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் 3,300 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் உட்பட 10 மருத்துவப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர் என அந்நாட்டுச் சுகாதார ஆணையகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தபோதும் தற்போதும் சீனாவில் கொரோனா பாதிப்பு சிறிய அளவில் உள்ளது. வெள்ளக்கிழமை 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு திரும்பியவர்.
இதேபோல் 64 அறிகுறியற்ற புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. இதுபோன்ற அறிகுறியற்ற 1,030 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதுவரை சீனாவில் 3,326 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். 81,639 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment