அமைச்சர்கள் தமக்குரிய வரப்பிரசாதங்களைப் பாதுகாத்துக்கொண்டு அரச ஊழியர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

அமைச்சர்கள் தமக்குரிய வரப்பிரசாதங்களைப் பாதுகாத்துக்கொண்டு அரச ஊழியர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்கள்

(எம்.மனோசித்ரா) 

இந்தியாவில் அமைச்சர்கள் தாமாக முன்வந்து தமது சம்பளத்தில் ஒரு பகுதியை கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு வழங்கியிருக்கின்றனர். ஆனால் இலங்கையிலுள்ள அமைச்சர்கள் தமக்குரிய வரப்பிரசாதங்களைப் பாதுகாத்துக்கொண்டு அரச ஊழியர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம் சுமத்தியுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மூன்று மாதங்களுக்கு கடன் தொகைகள் அறவிடப்படமாட்டாது என கூறப்பட்டாலும் இம்மாத சம்பளத்தில் கடன் தொகை அறிவிடப்பட்டுள்ளது. இந்த செயல் அரசாங்கம் மோசடி செய்து அரச ஊழியர்களை ஏமாற்றியிருப்பதை காட்டுவதாகக் கூறியே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் இன்று புதன்கிழமை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் காணொளியொன்றினை பதிவிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் அவர் அதில் மேலும் கூறுகையில், 

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு அரச ஊழியர்களின் சம்பளத்தில் கடன் தொகைகள் அறவிடப்பட மாட்டாது என்று அரசாங்கம் முன்னரே அறிவித்தது. எனினும் மார்ச் மாதம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் கடன் தொகை அறவிடப்பட்டிருந்தது. 

அது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பிய போது கடந்த மாதம் சுற்று நிரூபம் வெளியிடப்படுவதற்கு முன்னரே சம்பளத் தொகையை வங்கியில் வைப்பிலிடுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறினர். 

எனினும் இம்மாதத்திற்குரிய சம்பளம் வைப்பிலிடப்பட்டுள்ளதோடு கடந்த மாதத்தை போன்று கடன் தொகை அறவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரச ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். குறைந்தளவு சிங்கள தமிழ் புத்தாண்டைக்கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் மோசடி செய்து அரச ஊழியர்களை ஏமாற்றியிருக்கிறது. 

தற்போது அத்தியாவசிய சேவைகளுக்காக செல்லும் அரச ஊழியர்கள் அவர்களது சொந்த செலவிலேயே செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறானவர்களுக்கு கடன் தொகை உள்ளிட்டவை அறவிடப்பட்டு எஞ்சியுள்ள சம்பளம் போதுமானதாக இருக்காது. எனவே அரசாங்கம் மக்களை பற்றி மேலும் கருணை கொள்ள வேண்டும். 

இந்தியாவில் அமைச்சரவை அங்கத்தவர்கள் தமது சம்பளத்தில் ஒரு பகுதியை சுயமாக முன்வந்து கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் இலங்கையிலுள்ள அமைச்சர்கள் அனைவரும் தமது வரப்பிரசாதங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு மிகவும் மோசமான வகையில் அரச ஊழியர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். ஜனாதிபதி உள்ளிட்ட ஏனையவர்களிடமும் இந்த தவறை சரி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். 

சில தினங்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். இது சுற்று நிரூப பிரச்சினையல்ல. சுற்று நிரூபம் மார்ச் மாதத்துக்கு உரியதாகும். ஏப்ரல் மாதத்திலும் இதைக் காரணமாகக் கூற முடியாது. எனவே மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment