சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ள நேரும் சவால்களை வெற்றி கொள்வதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் இலங்கையின் சிறந்த கலாசார மற்றும் மரபுரிமை பிரதேசங்களை உலக மக்கள் அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யுனெஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் சூழல் கலாசாரத்துறைக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்துள்ள நாடுகளின் கலாசார அமைச்சர்களுக்கிடையிலான இந்த மாநாடு இன்று காணொளி மூலம் நடைபெற்றுள்ளது.

இந்த மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கலாசாரத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய உபாய மார்க்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கலாசாரத் துறையில் கட்டியெழுப்புவதற்கு பிராந்திய ரீதியில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இலங்கை 2,500 வருட வரலாற்றைக் கொண்ட நாடு.நாட்டிற்கு குறிப்பிட்டளவு வருமானத்தைப் பெற்றுத்தரும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் கலாசாரத் துறையின் ஒத்துழைப்பை நாம் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். 

நாடு 2018 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளது. துரதிஷ்டவசமாக இடம்பெற்ற 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் மற்றும் தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இத்துறை பெரும் பின்னடைவைக் கண்டுள்ளது.

விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறை கலாசாரத்துறை ஆகியன முழுமையாக சீர்குலைந்துள்ளது. இந்த நிலையில் கடுமையான மருத்துவ ஆலோசனைகளுக்கு மத்தியில் மீண்டும் நாம் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். 

சுற்றுலாத்துறை மற்றும் கலாசாரத்துறையுடன் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களின் ஜீவனோபாயத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இதன்மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக எதிர்வரும் காலங்களில் வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதியை பெற்றுக் கொள்வது அவசியமாகும். சர்வதேச நாடுகளின் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவி ஒத்துழைப்புக்களை கொள்வதும் அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment