கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 கொவிட் நோயாளர்கள் இருப்பதாக பரவிய செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் இவ் செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொவிட்-19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாம் கொவிட்-19 நோய் தொடர்பாக சமூக ஊடகங்களில் அல்லது வேறு எந்த ஊடகங்கள் மூலம் உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவது தொடர்பில் நாம் ஆரம்பம் தொடக்கம் முக்கியமாக தெரிவித்து வந்துள்ளோம்.
எனினும், விசேடமாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 கொவிட் நோயாளர்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் விசேட செய்தியாக பதிவானதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளரினால் எமக்கு அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று சில ஊடகங்களினால் இந்த செய்தி வெளியிடப்பட்டதாகவும் இதன் காரணமாக ஏனைய வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வரும் எமது நாட்டின் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவானதாக காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையை வேறு விதமாக பயன்படுத்தி இந்த உண்மைக்கு புறம்பான செய்தி உருவாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணையை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என்றார்.
இதனையடுத்து குறித்த வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுடைய எந்தவொரு நோயாளியும் இல்லை என்பதுடன் சிறுவர் நோயாளிகளின் சிகிச்சைக்காக வழமைபோன்று எந்த சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலைக்கு வர முடியும் என்றும் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment