(நா.தனுஜா)
தென்கிழக்காசிய நாடுகள் 2030 ஆம் ஆண்டாகும் போது தமது சுகாதாரக் கட்டமைப்புக்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு தாதிமார் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை சுமார் 1.9 மில்லியனால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிlப்பட்டுள்ளதாவது, கொவிட் - 19 ற்கு எதிரான போராட்டத்தில் சுகாதார சேவையாளர்கள் முன்வரிசையில் நின்று அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் நிலையில், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும் போது தமது சுகாதாரக் கட்டமைப்புக்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு தென்கிழக்காசிய நாடுகள் தாதிமார் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை சுமார் 1.9 மில்லியன் எனும் இரு மடங்கு தொகையாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்ப்பிணித்தாய் பராமரிப்பு, பிறந்த குழந்தைப் பராமரிப்பு, மருத்துவ சுகாதார ஆலோசனை வழங்கல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரத்துறை வலுவாக்கத்தின் மையப்புள்ளிகளாக தாதிமார் மற்றும் செவிலியர்களே உள்ளனர். எனவே அவர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், வலுவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் பூனம் கேட்ரபால் சிங் இதனைத் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி நிலையில் அவர்களால் ஆற்றப்படும் பணிக்கு எமது மனமார்ந்த நன்றியையும் கூறிக்கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment