(இராஐதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலை அவசரமாக நடத்துவதற்கும், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கும் எவ்வித அவசியமும் கிடையாது. தேர்தல் தொடர்பில் அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை எவ்விதத்திலும் பிரயோகிக்காது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் மாத்திரமே தடைகளை ஏற்படுத்துகின்றார்கள். தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. கொரோனா வைரஸ் தாக்கும் முழு உலகிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
எமது நாடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நாடு தழுவிய ரீதியாக நிவாரணம் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஊடாக நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பினை தொடர்புபடுத்தி மாறுபட்ட கருத்துகள் எதிர்த்தரப்பினரால் குறிப்பிடப்படுகின்றன. பொதுத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கும், அவசரமாக பொதுத் தேர்தலை நடத்தவும் எவ்வித அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது. கொரோனா வைரஸ் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் பிறகே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment