கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது, மருந்துகளை உருவாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என உலக தலைவர்கள் உறுதிமொழியெடுத்துள்ளனர். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் இன்று புதிய முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பான, பயனளிக்கக்கூடிய மருந்துகளை உருவாக்குவது, வைரசினை தடுப்பதற்காக பரிசோதனைகளையும் மருந்துகளையும் உருவாக்குவது, செல்வந்தர்கள் வறியவர்கள் அனைவருக்கும் மருந்துகள் சமமாக கிடைப்பதை உறுதி செய்வது உட்பட பல நோக்கங்களை அடிப்படையாக கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது.
இந்த முயற்சியை குறிக்கும் விதத்தில் வீடியோ கொன்பரஸ் முறை மூலம் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய உலக தலைவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டுள்ளனர். பிரான்ஸ், ஜேர்மனி, தென்ஆபிரிக்கா உட்பட பல நாடுகளின் தலைவர்கள் வீடியோ கொன்பரன்ஸ் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
நாங்கள் ஜி20 மற்றும் ஜி7 நாடுகளை இந்த முயற்சியில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டு முயற்சியில் அமெரிக்கா சீனாவையும் இணைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 ற்கு எதிரான போராட்டம் மனித குலத்தின் பொதுவான நன்மைக்கானது, இந்த மோதலை வெல்வதற்காக எந்த பிரிவினைக்கும் இடமளிக்க முடியாது என்பதை தெரிவிப்பதற்காகவே அவர்களை இணைத்துக் கொள்ள முயல்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகமோசமான சுகாதார சேவைகளை கொண்டுள்ள ஆபிரிக்க கண்டம் வைரசினால் மிகமோசமாக பாதிக்கப்படக்கூடிய ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள தென்னாபிரிக்க தலைவர் சிரில் ரமபோசா எங்களிற்கு உதவி தேவை என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களும் வீடியோ கொன்பரஸ் முறை மூலம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்கா இதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது என ஜெனீவாவிற்கான அமெரிக்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உத்தியோகபூர்வமாக இதில் கலந்துகொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment