சமூக ஊடகங்களின் பயன்பாடும் நமது சமூகப் பொறுப்புக்களும் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

சமூக ஊடகங்களின் பயன்பாடும் நமது சமூகப் பொறுப்புக்களும்

மருதநிலா நியாஸ்

இன்றைய நவீன உலகில் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி அபாரமானதாக காணப்படுவதுடன் ஒரு நொடிக்குள் தான் நினைத்த விடயத்தினை உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் அறியும் வகையில் அதன் வேகம் வியாபகம் பெற்றிருக்கிறது இதில் சமூக ஊடகங்களான முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் போன்ற இன்னும் பல சமூக ஊடகங்களும் தற்காலத்தில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சமூக ஊடகங்களில் செயற்பாட்டாளர்களாக இருப்பது சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதும் அறிவார்ந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை ஆனால் இதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதிலேதான் இதன் நன்மை தீமைகள் தங்கியிருக்கிறது.

நாங்கள் ஒரு பதிவை இடுகின்ற போது அல்லது பகிர்கின்றபோது அதனை எத்தனை பேர் விரும்புகின்றனர் எத்தனை பின்னூட்டங்கள் இடப்படுகின்றன எத்தனை பகிர்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது சமூக ஊடக பாவனையாளர்கள் மத்தியில் போலியானதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் காரணமாக அதனை இலக்காகக் கொண்டும் பல்வேறு வகையான பதிவுகள் இடப்படுகின்றன. அவற்றில் சிறந்தவை மேற்சொன்ன விடயங்களுக்குள் உள்ளாகின்றன ஆனால் பல பதிவுகள் சமூகத்துக்கு பொருத்தப்பாடற்ற சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை தோற்றுவிக்கக்கூடிய கூடிய விதத்தில் அமைகின்றன.

அவ்வாறு இடப்படும் ஒவ்வொரு பதிவும் பதிபவரின் நோக்கு எவ்வாறு இருப்பினும் அதன் மூலமாக வெளிப்படும் கருத்துக்கள் ஏனையவர்கள் மத்தியில் பிழையான பிம்பங்களை கொடுத்து அவர் சார்ந்த சமூகத்தினை ஒருவகையான கண்ணோட்டத்தில் நோக்குவதற்கும் வாய்ப்புக்களை அவை ஏற்படுத்துகின்றன.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும் ஏதோ ஒரு சமூக நோக்கில் ஒருவரிடும் பதிவிற்கு அதில் இடப்படும் பின்னூட்டல் நகர்வுகள் பாரதூரமான மிக மோசமானதொரு பின் விளைவின் பால் இட்டுச் செல்ல அவை சமூகத்தில் பல்வேறு வகையான பாதிப்புக்களுக்கு காரணியாகவும் அமைகிறது. என்பதனை நாம் அறிந்தும் அதனை பொருட்படுத்தாது அறியாதவர்களாகவே கடந்து செல்கின்றோோம். 

இவ்வாறு பயன்படுத்தும் சமூக ஊடக பயன்பாட்டாளர்களை அவர்களது தொடர் பதிவுகளைக்கொண்டு கொண்டு நாம் இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது இவ்வாறான தாற்பரியமற்ற பதிவானது சமூகத்தை தாக்கக்கூடிய அல்லது மோசமான பின்விளைவுகளின்பால் இட்டுச்செல்லக்கூடிய அபாயத்தை உருவாக்கி வருகிறது. இவ்வாறானதொரு நிலையினை சமூகம் அனுபவித்து வருவதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை இந்நிலை அபாயகரமானதாகும் .

இந்நிலை இவ்வாறு தொடருமாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகமும் அதன் தாக்கத்தின் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும் "எலி அறுக்கும் ஆனால் அதனால் தூக்க முடியாது" என்ற கருத்திற்கிணங்க முறையாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தவறுகின்ற இவ்வாறானவர்கள் நகர்ந்து விடும் நிலையில் மேல் மட்டங்களில் உள்ள அதிகார சக்திகள், சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்களால் கூட பிரச்சினைக்கு முகங்கொடுத்து தீர்வுகளை காண்பதில் பின் வாங்கும் நிலை காணப்படுவதுடன் அவ்வாறு முன்வந்தாலும் தீர்வு காண முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது அண்மைக்கால போக்குகள் சான்று பகர்கின்றன.

சமூகம்சார் ஆர்வலர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சமூகத்துக்கு பொருத்தமில்லாமல் இடும் பதிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது இதற்கு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலின் போது எம்மவர்களால் முகநூலில் இடப்பட்ட பதிவுகளை உதாரணமாக நோக்கலாம் அடக்கம் தவறிய, தூரநோக்கற்ற முறையில் வெறும் கலாய்ப்புக்காகவும் லைக் மற்றும் கமெண்டில் தான் இதில் முந்திக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவில் இப்பதிவுகள் அதிகரித்து சமூகத்தின் முகத்தில் கரியைப் பூசிக்கொண்ட சம்பவங்களை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது .

இதில் ஒரு சிலரது பதிவுகளை பார்க்கின்றபோது மலக் குழியைக் கிண்டிவிட்டுச் செல்கின்ற கோழிகளைப் போல் கிண்டிவிட்டு ஓடிச் செல்கின்றனர் அதனை விளங்காதவர்களாக மற்றவர்கள் முந்திக்கொண்டு பகிர்ந்து இன்னும் நாறவைத்து கொண்டிருக்கும் செயற்பாட்டுகள் எமது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காரணியாகவும் அமைகின்றன.

இந்த நிலையில்தான் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நாம் அதனை மிக சரியாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது எங்களால் பதியப்படுகின்றன பதிவுகள் ஒவ்வொன்றும் பெறுமானம் மிக்கது அது சமூகத்தின் தேவையாகவும் உள்ளது.

சமூக ஊடகம் என்பது எல்லோருக்கும் சம வாய்ப்பை வழங்கியுள்ள ஒரு உலக ஊடகமாகும் எனவே அதனை முறையாகப் பயன்படுத்தி பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது அந்த வகையில்தான் தம்மால் பதியப்படும் ஒவ்வொரு பதிவும் கத்தியை விட கூர்மையானது அந்த எழுத்துக்களுக்கு எங்கோ ஓர் இடத்தில் தனது வலிமையை காட்டும் சக்தி நிச்சயமாக உள்ளது.

இந்த புள்ளியில்தான் நாம் எங்களது சிந்தனையை கூர்மைப்படுத்தி கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது அவ்வாறு பதியப்படும் பதிவானது தனிப்பட்டவர்களுக்கோ சமூகத்திற்கோ நன்மை பயக்கக் கூடிய விதத்தில் அமையுமா என்ற விடயத்தினை பலமுறை சிந்தித்து அதற்கு ஏற்ற விதத்திலேயே பதிவுகள் இடப்பட வேண்டும் என்பதில் நாம் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒரு சமூக ஒழுக்கமும்கூட.

அது நமது அசிங்கங்களை மற்றவர்களுக்கு திறந்து காட்டும் பதிவுகளாக இருக்கக்கூடாது என்ற விடயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது அவ்வாறு நோக்காத சந்தர்ப்பங்களில் ஒரு சமூக அங்கத்தவர் என்ற ரீதியில் நாம் ஒவ்வொருவரும் தான் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி வரும் என்பதனை என்பதனையும் அவ்வாறு பதிவுகளை இடுபவர்களால் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் அரசியல் மற்றும் சமயக் கருத்து சார்ந்த விடயங்களில் மாறுபட்ட கொள்கை உடையவர்களாக இருந்தாலும் அது தொடர்பான கருத்துகள் விமர்சனங்களை மேற்கொள்கின்ற போது தூர நோக்குடனும் ஒட்டுமொத்த சமூகத்தை பாதித்து சல்லடைக்குள் தள்ளுகின்ற நிலைக்குள் இருந்து விடுபட வேண்டிய தேவை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

இந்த வகையிலேயே தான் இவ்வாறான பதிவுகளை இடும் சமூக ஊடக பாவனையாளர்களை வழிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமானதொன்றாக காணப்படுகிறது. இதில் முக்கியமாக பெற்றோர்கள், கல்விமான்கள், சமயப் பெரியார்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மேற்படி விடயத்தினை கவனத்திற் கொண்டு எமது சமூகத்தை வழிப்படுத்த மேற்படி விடயத்தில் அக்கறை எடுத்து கவனமாக இந்த சமூக ஊடகத்தின் ஊடாகவே வழிப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இதற்கான ஒரு ஒரு பொறிமுறையினை இந்த சமூக ஊடகங்கள் ஊடாவே தாங்கள் ஏற்படுத்திக்கொண்டு செயற்படுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பானதொரு சமூகக் கட்டமைப்பினை உருவாக்கலாம் என்பதே பெரும்பாலான சமூக ஊடக பாவனையாளர்களது கருத்தாகவும் இருக்கின்றது.

No comments:

Post a Comment