இடர்காலத்தில் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே, அவர்களை காப்பதோடு அவர்களின் உரிமைகளையும் வலியுறுத்வோம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

இடர்காலத்தில் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே, அவர்களை காப்பதோடு அவர்களின் உரிமைகளையும் வலியுறுத்வோம்

எந்த இடர்காலத்திலும் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது உழைப்பாளர்களே. அவ்வாறே இந்த கொரோனா இடரிலும் உழைப்பாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே காப்பதோடு, அவர்களின் உரிமைகளையும் வலியுறுத்வோம் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

மே தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்திலும் உயிரிழப்புகளின் நெருக்கடியிலும் உலகம் சுருண்டு போயிருக்கும் இந்த நாட்களில் அதிகமதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர் வர்க்கத்தினரேயாகும். 

இயல்பான சூழலிலேயே நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பெரும் சிரமப்படும் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி, மற்றும் வாடகை வண்டி ஓட்டுனர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், கடற்றொழிலாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், போராளிகளாகச் செயற்பட்டோர் மாற்றுவலுவுள்ளோர் எல்லாம் இப்பொழுது மிகமிகச் சிரமப்படுகின்றனர். 

எமது சூழலில் இவர்களுக்கான சிறிய அளவிலான உதவிகள் பல்வேறு தரப்பினரால் கிடைக்கப் பெற்றாலும் இந்த உதவிகள் இவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் போதுமானவை அல்ல. இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தி பாதுகாப்பும் உத்தரவாதமும் உடையதொரு வாழ்க்கையை உருவாக்காத வரையில் இவர்களுடைய பிரச்சினை ஒரு போதுமே தீரப்போவதில்லை. 

அது மட்டுமல்ல, இந்த மாதிரி இடர் காலத்தின் போதெல்லாம் இவர்கள் பெரும் நெருக்கடியான நிலவரத்தை சந்திக்க வேண்டியவர்களாவும் உள்ளனர். அந்தளவுக்கு இவர்களுடைய நிலைமை பாரதூரமானதாக உள்ளது. எனவேதான் இந்த பாதக நிலையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு மே தினத்தின் போதும் சமத்துவக் கட்சியினராகிய நாமும் இதனையே வலியுறுத்தி வருகிறோம். இந்த மே தினத்தின் போதும் இதை நாம் அழுத்தமாக முன்வைத்து பேசுகிறோம். எமது அரசியல் முன்னெடுப்பில் நாம் தொழிலாளர்களின் நலன்களையே முதற்கவனமெடுத்துச் செயற்பட்டு வருகிறோம். 

முதலாளித்துவ நாடுகளிலேயே தொழில் இழப்போ வருமான இழப்போ நேருமிடத்து அந்தக் குடும்பங்களையும் அந்த மனிதர்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்போது எமது நாட்டில் இன்னமும் உழைப்பாளர்கள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் நிர்க்கதியான வாழ்க்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. இந்த நிலைமையை நாம் அனைவரும் கூடி மாற்றியமைக்க வேண்டும் என எமது மே தினப் பிரகடனமாக இதை நாம் வெளிப்படுத்திக் கொள்கிறோம். 

கொரோனா தொற்றானது இந்த ஆண்டு மே தின எழுச்சியையும் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனாலும் எமது நெஞ்சத்து நினைவுகளில் மே தின எழுச்சியை, தொழிலாளர்களின் உணர்வுகளை, அவர்களுடைய பிரச்சினையை, அவர்களுடைய எதிர்காலத்தை நிறுத்திக் கொள்கிறோம். 

இந்த உலகம் உழைப்பாளர்களினால் ஆனது. அவர்கள் உருவாக்கிய உலகத்திலேயே எல்லோரும் வாழக்கூடியதாக உள்ளது. அப்படி வாழும் அனைவரும் இந்தத் தொழிலாளர் வர்க்கத்தை வாழ வைக்க முன் வர வேண்டும். இது ஒவ்வொருவருக்குமான பொறுப்பாகும். 

இப்போதைய சூழலில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் ஊரடங்கினாலும் போக்குவரத்துத் தடை, தனிமைப்படுத்தல் நிலைமைகளினாலும் தொழிற்றுறை முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழில் முடக்கம், வருமான இழப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நாம் அனைவரும் கை கொடுத்து உதவ வேண்டும். இதை எமது வரலாற்றுக் கடமையாகவும் மே தினத்தின் பொறுப்புமிக்க பணியாகவும் மேற்கொள்வோம். 

அடுத்து வரும் நாட்கள் எப்படியிருக்கும் என்று திட்டமிட முடியாத அளவுக்கே உலக நிலைமை உள்ளது. இந்தச் சூழலிலும் தமது பொருளாதார நலன்களை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கின்றன வல்லரசுகளும் உலக முதலாளித்துவ சக்திகளும். இவை தொழிலாளர் சமூகத்தை கவனத்திற் கொண்டு தமது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment