இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10 தொன் மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10 தொன் மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு !

(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவலினால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் 10 தொன் அத்தியாவசியமான மருந்து தொகுதியை இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகுதி மருந்துப் பொருட்கள் எயார் இந்தியா விசேட விமானம் மூலமாக இன்று செவ்வாய்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டினை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைகிறது.

உள்நாட்டில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் தமது வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம் குறித்த வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்கள் மட்டத்திலான காணொளி மூலமான மாநாடு இந்திய பிரதமரின் யோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்ததனை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

சார்க் கொவிட் - 19 அவசரகால நிதிக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்கள் மார்ச் 26 ஆம் திகதி காணொளி மாநாடொன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் இந்திய சுகாதார அமைச்சு சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கு இணையம் மூலமான பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.

குஜராத்தின் காந்தி நகரில் அமைந்துள்ள சார்க் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (SDMC) சார்க் உறுப்பு நாடுகளின் கொவிட் – 19 நிலைமை குறித்த இணையத்தளம் [http://www.covid19-sdmc.org/] ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சகல திட்டங்களிலும் இலங்கை மிகவும் முக்கியமான ஒரு பங்காளராக உள்ளது.

No comments:

Post a Comment