ஊரடங்கை முறையாக பின்பற்றவும், இன்று முதல் மீறுவோருக்கு பிணை கிடையாது - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

ஊரடங்கை முறையாக பின்பற்றவும், இன்று முதல் மீறுவோருக்கு பிணை கிடையாது

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் ஊரடங்குச் சட்டத்தை பின்பற்றாத நிலையில் கைது செய்யப்படுபவர்களுக்கு இன்று முதல் பொலிஸ் பிணை கூட வழங்கப்படமாட்டாது என, பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மிகவும் பாரதூரமான சுகாதார பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தடையின்றி வழங்களை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதை முகாமைத்துவம் செய்வதற்கு பொறுப்பான செயலணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தனது விருப்பத்திற்கு அமைய எவரும் வீதிகளுக்கு வரக் கூடாது. செயலணியினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள வழங்கல் வாகனங்கள் மட்டும் வீதிகளில் பயணம் செய்ய முடியும். வேறு எந்த ஒரு வாகனமும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமின்றி பயணம் செய்ய முடியாது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. 

எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகள், சிறு தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய மற்றும் துறைமுக சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொலிஸாரும் இராணுவத்தினரும் ஊரடங்கு சட்டதிட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment