கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒன்றிணைந்து செயற்படுவதற்காகத்தான் கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டோம். ஆனால் தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைக்கப் போகின்றது என்ற அற்ப நோக்கத்திற்காக அரசியல் சூழ்ச்சி செய்து நாம் மேற்கொண்டிருந்த அத்தனை நடவடிக்கைகளையும் இல்லாது செய்துவிட்டார்கள். இத்தகைய நிலைமையில்தான் இன்று நாங்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒருமித்து செயற்படுவதன் மூலம்தான் எமக்கான தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியை உருவாக்கியது. இந்தச் சந்தர்ப்பத்தை நாங்களும் பயன்படுத்தி நீண்ட காலமாக பிரச்சினையாக இருந்த இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக அதற்கேற்ற முன்னேற்பாடான தீர்வு முயற்சிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். அதேவேளை அது எமது பகுதியில் அபிவிருத்தியையும் செய்வதற்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வந்தோம்.
இவ்வாறான முயற்சிகள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என தென்னிலங்கையைச் சார்ந்தோர் நினைத்தமையினால் அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி அத்தனை முயற்சிகளையும் இல்லாது செய்துள்ளார்கள். அதன் பின்னரான ஜனாதிபதித் தேர்தலும் நாங்கள் ஒருமித்த கருத்துக்களை வெளியிட்டபோதும் ஆட்சியில் அமர்ந்துள்ள கோத்தாபய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தினால் ஆட்சியில் அமர்ந்துள்ளேன் எனவும் அவர்களுக்காகத்தான் செயற்படப்போகிறேன் என கருத்துக்களைக் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமன்றி இந்த நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றியோ இனப்பிரச்சினை பற்றியே எத்தகைய கதைகளையும் கூறாது அவர்கள் செயலாற்றி வருகின்றார்கள். அவரது இந்தச் செயற்பாடானது தமிழ் மக்களை இன்னும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது எங்களை இன்னும் அச்சத்திலேயே ஆழ்த்தியுள்ளது.
இத்தகைய நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எங்களுக்குள்ளேயே பல கூட்டணிகள் உருவாகியுள்ளது. நாங்கள் எதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டோமோ அவ்வாறே மீளவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததே அத்கைய பலம்தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என்றார்.
வீரகேசரி
No comments:
Post a Comment