முகக் கவசம் அணிவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 26, 2020

முகக் கவசம் அணிவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

(எம்.மனோசித்ரா) 

நாட்டில் சிறந்த உடல் நலத்துடன் இருப்பவர்கள் முகக் கவசங்களை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். நோய்த் தொற்றுக்கு உட்படாதவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு எந்த சந்தர்ப்பத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. அதற்கமைய எவ்வித நோய்க்கும் உட்படாதவர்கள் முகக் கவசம் அணியாமலிருப்பது குற்றமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

முகக் கவசம் அணிவது தொடர்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில் தெளிவுபடுத்தி பதில் பொலிஸ் மா அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டடுள்ளதாவது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முகக் கவசம் தொடர்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். 

இதுவரையில் முகக் கவசங்களைக் கட்டாயமாகப் பயன்படுத்துமாறு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளவர்களும், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், சுவாச நோய் அறிகுறிகள் காணப்படுபவர்களுக்குமே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்டவற்றை விடுத்து சாதாரணமாக அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு முகக் கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு எந்த சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தவில்லை. 

இவ்வாறு அநாவசியமாக முகக் கவசங்களை தவறாகப் பாவிப்பதால் நோய்த் தொற்று அதிகரிக்கின்றது. அத்தோடு பாவித்த முகக் கவசங்களை முறையாக அகற்றாமையினாலும் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன. 

முகக் கவசங்களை வைத்திருப்பவர்கள் தேவையேற்படும் போது மாத்திரம் அதனை பாவிப்பதே சிறந்ததாகும் என்பதையே சுகாதார அமைச்சு வலியுறுத்துகின்றது. 

எவ்வாறிருப்பினும் கொரோனா வைரஸிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். 

இந்நிலையில் எவ்வித நோய் தொற்றுக்கும் உள்ளாகாத நபரொருவர் முகக் கவசத்தை பாவிப்பாரானால் அது அவரது சுய விருப்பமேயாகும். எந்த சந்தர்ப்பத்திலும் அனைவரும் முகக் கவசங்கள் பாவிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அழுத்தம் பிரயோகிக்கவில்லை. 

அத்தோடு உடல் நலத்துடன் இருப்பர்கள் முகக் கவசம் அணியாமலிருந்தால் அது தவறல்ல என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம். இது தொடர்பில் உங்களின் அவதானத்திற்கு கொண்டு வருகின்றோம் என்று அதில் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad