மட்டக்களப்பு பல்கலைக்கழகம் எனப்படும் புனானையில் அமைந்துள்ள, ஷரீயா பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் கட்டடத் தொகுதியை நோய்த் தொற்றுள்ளவர்களை தடுத்து தனிமைப்படுத்தி (quarantine) பரிசோதித்து, சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றுவதாக அரசு அறிவித்துள்ளது !
உண்மையிலேயே மிகவும் கீழ்த்தரமான மனநிலை கொண்ட திட்டமிடல் பிரிவுகளில் உள்ள இனவாதத்தால் மூளை குழம்பிப்போன சிலரின் அறிவிலித்தனமான முடிவு இது என்பது, மருத்துவ, திட்டமிடல் அறிவு கொண்ட எவருக்கும் புரியும்.
கடுமையான தொற்றும் திறன் கொண்ட ஒரு நோய்க்கான தனிமைபடுத்தி பரிசோதித்தல் நிலையம், அதற்கான பொருத்தமான பல கட்டமைப்புகளையும், வசதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும் !
இல்லாவிடில் தனிமைப்படுத்தும் நோயாளிகளுக்குள்ளும், அதன் வைத்தியர்கள், ஊழியர்களுக்கிடையேயும் அந்நோய் மிக விரைவாக தொற்றி, அப்பிரதேசத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் !
ஒவ்வொரு நோயாளியையும் தனிப்பட்ட முறையில் தனிமைப்படுத்துதல், வெளியேறும் காற்று, மருத்துவ கழிவுகள், மற்றும் உபகரணங்களை பொறுத்தமான முறையில் அகற்றுதல் என்பவற்றுக்காக அதற்கே உரிய முறையில் பொறியியலாலர்கள், தொற்று நோய் தடுப்பு அதிகாரிகளின் திட்டமிடலில் மிகவும் நுணுக்கமாக அமைக்கப்படும் கட்டடங்கள், பரிசோதனை நிலையங்கள், சுகவீனமடையும் நோயாளரை குணப்படுத்துவதற்கான வைத்திய வசதிகள், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு என பலதரப்பட்ட விடயங்களை இத்தனிமைப்படுத்தும் பிரிவு கொண்டிருக்கவேண்டும்.
இவை எதுவுமே கருத்திலெடுக்கப்படாமல், கல்விக்காக மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை பாழ்படுத்தி ஒரு இனத்திற்கெதிரான, அல்லது ஒரு தனி மனிதனிற்கெதிரான, சிறுபாண்மைக்கெதிரான அரசியல் பழிவாங்களைக் கொண்ட மனநிலை உடைவர்களால் எடுக்கப்பட்ட அப்பட்டமான சமுகத் துரோகமாகவே இதனை பார்க்கமுடியும்.
இதனால் உண்மையில் பாதிக்கப்படப்போவது ஒரு தனி மனிதன் அல்ல ! எமது தாய்த்திரு நாடுதான் பாதிக்கப்படபோகின்றது !மட்டக்களப்பு மக்கள் பாதிக்கப்படபோகிறார்கள் ! கிழக்கு பாதிக்கப்படபோகின்றது ! நாடு பாதிக்கப்படப்போகின்றது!
மேற்கூறிய முறையில் அமைக்கப்படாத, குறைபாடுகளால் நிறைந்திருக்கும் ஒரு இடத்தை இவ்வாறான ஒரு தொற்று நோய் தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றும் போது வைத்திய ஆளனியில், வசதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள வாழைச்சேனை வைத்தியசாலை, பலதரப்பட்ட மேலும் சிக்கல்களால் நிறைதிருக்கும் மட்டக்களப்பு வைத்தியாசாலைகள் தாம் விரும்பியோ விரும்பாமலோ இந்நோயாளிகளை அவசர நிலைகளின் போது அல்லது பரிசோதனைகளின் போது பரிபாலனம் செய்ய வேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொள்வர்.
இதனால் இப்பிரதேச மக்கள் முதலில் இந்நோய்க்கு முகம் கொடுக்க வேண்டியதோடு, நாடுபூராக இந்நோய் மிக இலகுவாக பரப்பப்படும் என்பதே உண்மையாகும்.
நான் மேற்சொன்ன அனைத்து வசதிகள் கொண்ட, 1000 அறைகள் கொண்ட ஹுசென்சான் (Huoshenshan) வைத்தியசாலையானது 9 நாட்களில் கொரோனோ வைரஸ் தொற்று நோயாளருக்காக உருவாக்கி பிரமிக்கச் செய்திருக்கின்றது சீன அரசு.
கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதிலிருந்து இன்று வரை இரண்டு மாதங்களாகியும், கண்கூடாகவே அதன் சுகாதார, சமூகப் பொருளாதரா இழப்புகளை கண்டும், அதனை பரிபாலிக்க எந்த ஒரு சிறப்பு நிலையத்தையும் அமைக்காமல் அரசியலும், இனவாதமும் ஊரிப் போய்க்கிடக்கும் இவ்வரசுகளைக் கொண்ட நாட்டில் வாழ்தல் நமது துர்ப்பாக்கியம் தான்.
பொறுத்தமான இடத்தில் பொறுத்தமான வசதிகளோடு அமைக்கப்படும் நிலையங்களால் மாத்திரமே இந்நோய்க்கட்டுப்பாடு சிறப்பாக செயல்படுத்தப்படும்!
எனவே இன மத அடிப்படையில் பிரிந்து நாட்டை சின்னாபின்னப்படுத்தாமல், அனைவரும் இனைந்து இப்பிரச்சினையை தீர்க்க வேண்டியது இப்பிரதேச, இந்நாட்டு கடமையாகும்!
வைத்தியர் எம்.பீ.எம். ஹாலித்
No comments:
Post a Comment